உங்கள் ஆட்சி நிர்வாகத்தால் தலைகுனிந்து நிற்கும் தமிழகம்… நீங்கள் தான் பொறுப்பு : CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
5 October 2023, 12:57 pm

திமுக அரசு முழுக்க முழுக்க   விளம்பரத்தால் நடத்தப்படுகிற அரசை தவிர, திட்டங்களால் நடத்தப்படுகிற அரசு அல்ல என  மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ;- தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்கள் என்ன? திட்டங்களின் பயன்பாடு என்ன? திட்டங்கள் இருக்கிறதா, இல்லையா என்ன விவாதம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் கல்வியை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் திட்டத்தை புரட்சி தலைவி அம்மா கொண்டு வந்து, அதன் மூலம் தாலிக்கு 8 கிராம் தங்கம், படித்த பெண்களுக்கு 25,000 ரூபாய், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 அம்மா வழங்கினார். இதன் மூலம் 12 லட்சத்து 51 ஆயிரம் ஏழை பெண்கள் பயன் அடைந்தனர். தாய் வீட்டு சீதனமாக இருந்தது.

அதனை தொடர்ந்து. அனைவருக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும் ஏன் பாரபட்சம் என்று கேள்வி சட்டமன்றத்தில் எழுந்த போது, பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த திட்டம் என்று கூறினார். அதன் மூலம் பெண்கள் கல்வி அதிகரித்தது.

இன்றைக்கு அந்த திட்டத்தை திமுக தடை செய்துவிட்டது, என்ன காரணம்? இந்த திட்டத்திற்கு வரவேற்பு இல்லையா? மக்கள் வேண்டாம் என்று சொன்னார்களா? என்ன குறைபாடு கண்டார்கள். 520 தேர்தல் வாக்குறுதியும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இன்றைக்கு 37 குழுக்களை அமைத்து அரசை நிர்வாகம் செய்கிறோம் என்று மார்தட்டுகிறீர்கள். முழுக்க முழுக்க இந்த அரசு விளம்பரத்தால் நடத்தப்படுகிற அரசை தவிர, திட்டங்களால் நடத்தப்படுகிற அரசு அல்ல என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

திட்டங்களால் வடிவமைக்கப்பட்ட அரசு அல்ல, திட்டங்களால் செயல்படுகிறஅரசு அல்ல, திட்டங்களால் மக்கள் எந்த நன்மையும் இல்லை. பூஜ்ஜியமாக இருக்கிறது. விளம்பரத்தால் இந்த அரசு காலத்தை கடத்திக் கொண்டு போகிறது. அன்பு, பாசம், கருணை இந்த அரசுக்கு எள் முனையளவும் இல்லை, அன்பு இல்லாத அரசு, அராஜக அரசு, எல்லோரையும் அரவணைக்காத இந்த அரசை தூக்கி எறியப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கையாக இருக்கிறது.

கறவை மாடுகள், ஆடுகள் வழங்குகிற திட்டத்தை ரத்து செய்து விட்டீர்களே, இது நியாயம் தானா..? குடிமராமத்து திட்டத்தை ரத்து செய்து விட்டீர்களே, இது நியாயமா..? இந்த கணினி யுகத்தை எதிர் கொள்வதற்காக வல்லரசு நாடுகளிலே கூட இல்லாத வகையில், 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கண்ணி திட்டத்தை ரத்து செய்து விட்டீர்களே? அந்தத் திட்டத்தை பற்றி  வாய் திறக்க மறுக்கிறீர்களே என்ன காரணம், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதா? அல்லது தொடர்கிறதா இரண்டரை ஆண்டுகளாக அந்த திட்டம் குறித்து எந்த விளக்கமும் இல்லை. 2000 அம்மா மினி கிளினிக் ரத்து செய்யப்பட்டது மக்களின் பிரச்சினை தீர்க்க நீங்க அமைக்கப்பட்டுள்ள 37 குழுக்கள் செயல்பாடு என்ன?

நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகள் கிடப்பிலே கிடக்கிற கோப்பாக கோட்டையிலே நிலுவையில் இருக்கிறது. புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் செயல்படுத்திய திட்டங்களை ரத்து செய்து இருக்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? உங்கள் வீட்டு கஜானாவில் இருந்து திட்டங்களுக்காக கொடுக்கவில்லை. அரசு கஜானாவில் இருந்துதான் திட்டங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இன்றைக்கு மூன்று லட்சம் கோடி நீங்கள் கடன் வாங்கி இருக்கிறீர்களே? இந்தியாவிலேயே கடன் வாங்கிய மாநிலத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு, உங்களுடைய  செயல்படாத நிர்வாகத்தால், குளறுபடி நிர்வாகத்தால், தொலைநோக்கு சிந்தனை இல்லாத நிர்வாகத்தால் இருக்கிறது. 

3லட்சம் கோடி கடனை பெற்று இருக்கிற தமிழ்நாடு அரசு, இன்றைக்கு இந்தியாவில் அதிக கடனை பெற்று இருக்கிற அரசாக தமிழ்நாடு உள்ளது. உங்கள் ஆட்சி நிர்வாகத்தால் தலை குனிந்து நிற்கிறதே, அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 421

    0

    0