மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை… திமுக ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகுதொலைவில் இல்லை ; ஆர்பி உதயகுமார்..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 3:50 pm

விலைவாசி உயர்வில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாநாட்டிற்காக மக்களை குடும்பம், குடும்பமாக பங்கேற்கும் வண்ணம் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாடு லோகோ ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி கே.கே. நகர் பூங்கா அருகே நடைபெற்றது.

மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி ஆர்.பி.உதயகுமார் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது:- எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்டு 20ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து, கழக அம்மா பேரவையின் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லம் தோறும் இலை மலர மரக்கன்று வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, மாநாட்டு விழிப்புணர்வுக்காக இரண்டு சக்கர வாகனங்களில் மாநாட்டு லோகோ கொண்ட ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் வகையில் அமையும். இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு, மக்கள் விரோத செயல்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இன்றைக்கு தமிழகம் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பட்டா போட்டது போல நினைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த அரசு விளம்பர வெளிச்சத்தில் உள்ளது.

அரசு விழாக்களில் ஸ்டாலின் பேரன் இன்பநிதியும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகம் கருணாநிதி குடும்பச் சொத்து போல, அவல நிலை உருவாகி உள்ளது என்று மக்கள் கண்ணீரும், வேதனையும் அடைந்து வருகிறார்கள்.

இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெக்கும் வகையில் மாநாடு அமையும். நாள்தோறும் எடப்பாடியார் திமுக அரசின் செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டிவருகிறார், ஆனால் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவேரி கேள்விக்குறியாக உள்ளது, இதற்கு யார் காரணம் ? மேகதாதுவில் அணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். இது நியாயமா? டெல்டா பகுதியில் வறட்சியால் பயிர்கள் வாடி வருகின்றது, இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.

மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு சுடசுடஉணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்டு உள்ளார். தொழில் துறையில் இந்த அரசு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. வறுமை ஒழிப்பில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஆதரவை இந்த அரசு இழுந்துள்ளது, மக்களை இந்த அரசு வஞ்சித்து வருவதால் தார்மீக உரிமை இழந்து விட்டது. மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், ஆட்சி மாற்றம் நிச்சயம் உருவாகும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், தனியார் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்கள்.

ஆனால் இன்றைக்கு ஒரு கோடியே 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்து உள்ளார்கள். ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு 10 லட்சம் பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புக்காக காத்து வருகிறார்கள். ஆனால் இரண்டாண்டுகளில் வேலை வாய்ப்புக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது இளைஞர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

இன்றைக்கு உயர் கல்வித் துறை பற்றி ஸ்டாலின் பெருமையாக பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அம்மாவும், எடப்பாடியாரும் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செய்து திட்டங்களை செய்து கொடுத்தார்கள். மேலும் பள்ளிகல்விகளுக்கு கூடுதலாக கட்டிடங்களை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். ஆனால் திமுக எதையும் செய்யவில்லை.

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். தனது தந்தையாரின் நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் சூளுரை ஏற்றுள்ளார்.
ஆனால் உண்மையான கள நிலவரம் என்னவென்றால், இந்த ஆட்சியின் மீது மக்கள் வேதனையில், துன்பத்தில், துயரத்தில் உள்ளனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தோல்வி தான் பெறுவார்கள், என கூறினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 431

    0

    0