மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மர்மம்… 12,500 வேட்டி, சேலை திருட்டு ; திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!
Author: Babu Lakshmanan8 நவம்பர் 2023, 11:46 காலை
மக்களை பாதுகாக்கும் புகலிடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் திருடர்கள் புகலிடமாக மாறி விடக்கூடாது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது ;- ஒரு நாள் மழைக்கே தமிழகம் தத்தளித்து வருகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு கிடைத்த கொடையாகும். எடப்பாடியார் ஆட்சிகாலத்தில் இது போன்ற காலங்களில் கண்மாய், ஏரிகள் எல்லாம் தூர்வாரப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்தது தற்போது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக குடிமாரமத்து திட்டம் இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டது. நீர் நிலைகள் தூர்வராமல் இருந்தால் மழை நீரே எங்கே சேமிப்பது?,
மழைக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளமால் மக்களை பாதுகாக்க தவறிவிட்டது. தற்போது, வைகை அணையில் 9000 மில்லி கன அடி உள்ளது. ஆகவே கள்ளந்திரி பகுதியில் உள்ள 45,000 ஏக்கர் இருபோக பாசங்களுக்கும், மேலூர் பகுதியில் உள்ள 85,000 ஏக்கர் ஒருபோக பாசனங்களுக்கும், திருமங்கலம் பகுதியில் உள்ள 19,500 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தற்போது உள்ள நிலையில் 120 நாட்களுக்கு விவசாயிகளுக்கு தாராளமாக தண்ணீர் வழங்கலாம். ஆகவே, பாசனத்திற்கு உரிய தண்ணீரை அரசு திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகம் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய புகலிடமாக இருக்க வேண்டுமே தவிர, திருடர்களின் புகலிடமாக மாறிவிடக்கூடாது என்று மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இலவச வேஷ்டி சேலை வைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேட்டி சேலை முற்றிலுமாக கருகியது.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்தில் கணினி திருடு போய்விட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12,500 வேஷ்டி சேலை திருடுபோய் உள்ளது. இது மக்கள் சொத்து, அரசின் சொத்தாகும். ஒரு அரசு சொத்தை காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்.
ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வண்ணம் இலவச வேட்டி சேலை திட்டத்தை 1983 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் சிறப்பாக மக்களுக்கு வழங்கினர். இந்த இரண்டு வருடம் வேட்டி, சேலை திட்டத்தை யாருக்குமே கொடுக்கவில்லை. இன்றைக்கு தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து, மடிக்கணினி திட்டம் ரத்து, இருசக்கர வாகன திட்டம் ரத்து இப்படி அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், திமுகவின் 520 வாக்குறுதிகள் கடலில் கறைத்த பெருங்காயம் போல உள்ளது. கொசு உற்பத்தி, கடன் வாங்குவது, சாலை விபத்துகள் போன்றவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அம்மா கொண்டு வந்த அம்மா உணவகத்தை இன்று கூட பக்கத்து மாநிலங்களில் தேர்தல் அறிக்கையாக கூறப்பட்டுள்ளது.
100 நாட்கள் வேலை பணியாளர்களுக்கு 13 வாரமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொருக்கும் 9000 முதல் 16,000 வரை நிலுவையில் உள்ளது. இவர்களின் சம்பளத்தை கூட பெற்றுத்தராத நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக உள்ளார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை யாரும் பேசவில்லை. சமூக ஆர்வலர்கள் பேசுவதற்கு கூட வாய் பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு வாய்பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. சமூக நீதி, பெண் உரிமை குறித்து பேசுதற்கான தகுதியை திமுக இழந்து விட்டது,
நீட் ரத்து கையெழுத்தை யாரிடம் கொடுக்க போகிறார்கள். நீட் ரத்து கையெழுத்து இயக்கம் தோழமை கட்சிகளை சமாதானம் செய்யவே நடைபெறுகிறது. திமுக இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. இன்னும் 25 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வர முடியாது. அந்த அளவில் மக்களின் வெறுப்பை சம்பாத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல ஒ.பி.எஸ் செயல்பட்டார். தொடர்ந்து லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்தி வந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர். தற்போது தெளிவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்ததால் மக்களுக்கு தெளிவான பாதை தெரிந்துவிட்டது. இன்றைக்கு நியாயம், சத்தியம் வென்றுவிட்டது. தொண்டர்கள் உற்காசத்துடன் உள்ளனர்.
அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிமுக கதவு திறந்து இருக்கும். ஆனால் எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது, என கூறினார்.
0
0