கலைஞர் நூலகத்தை 10 முறை ஆய்வு செய்கிறார் CM ஸ்டாலின்… அரசு மருத்துவமனைகளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை : முன்னாள் அமைச்சர் உதயகுமார் !!
Author: Babu Lakshmanan14 September 2022, 6:07 pm
அரசு விழாக்களை கட்சி விழா போல முதல்வர் நடத்துவதாகவும், உதயநிதி காட்டிய செங்கலை எடுத்து வந்து எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி பணிகளை செய்வாரா..? என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீர் திறக்கக்கோரி முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
ஆட்சியர் அனீஷ்சேகரும் கால்வாயில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது :- உசிலம்பட்டி 58ம் கால்வாய் திட்டம் எனும் 40ஆண்டு கால கனவு திட்டத்தை நனவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.58ம் கால்வாய் திட்டத்தில் அதிமுக அரசு மூன்று முறை தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இம்முறை வைகை அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 மணி நேரத்தில் மதுரை வரும் முதல்வர் மதுரை மக்கள் மீது அக்கறை இருந்தால் 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 70.44அடி தண்ணீர் உள்ள வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறக்கவில்லை.
விவசாயிகள் நலனை புறக்கணிக்கிற அரசாக, விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளது. மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சனையை கவனத்தில் கொள்ளாவார் என்ற நம்பிக்கையோடு இதை தெரிவிக்கிறோம்.
110 வருவாய் கிராம மக்களின் குடிநீர் ஆதரமாகவும், 2500ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டத்திற்கு 140 நாட்களுக்கு 316 கன அடி நீர் திறக்க வேண்டும். முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவே வந்தோம். மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதன் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து மனுவினை தந்துள்ளோம். முல்லைப்பெரியாறு அணை உரிமையை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் விழா எடுத்த அம்மா திடலை கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள்.
ரூல்கர்வ் என்ற அடிப்படையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரை திறந்து கொள்கிறார்கள். சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றனர். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசு, கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீவு காண வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் விவசாயிகளுக்கு முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா? தன் மெளன விரதத்தை கலைப்பாரா? உரிய விளக்கம் கொடுக்க முன் வருவாரா? மதுரை வரும் முதல்வர் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவாரா.?
முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, ஐப்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர் அரசு, மருத்துவமனைகளில் மாத்திரைகள் சரியாக கிடைப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது, முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என செங்கலை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தவர்கள் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா..? பணிகளை தொடங்குவாரா..? என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கலைஞர் நூலகத்தை பத்துமுறைக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர் அரசு மருத்துவமனைகளில் நோய் தீர்க்கும் மருத்துவத்திற்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா..?
திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி கணவர் ஜெகதீசன் ஒரு டிவிட்டர் பதிவில் அதிர்ச்சியடை வைத்துள்ளார். திமுக அரசிலே ஊழல் இல்லாத ஒரு துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என திமுகவின் முன்னாள் அமைச்சரின் கணவர் பதிவிட்டு இருப்பதே இந்த அரசின் செயல்பாடுக்கு சாட்சியாக உள்ளது.
அரசு விழாவை கட்சி விழாவை போல நடத்தி அரசு நிர்வாகத்தை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மாநாடு, முப்பெரும் விழா என எத்தனை விழா நடத்தினாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதல்வர்…? எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள், அவர்கள் தொகுதிக்கான பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன.
சசிகலா குறித்த செய்தியாளரின் கேள்விக்கு நாளை வாருங்கள் என சிரித்துக்கொண்டே பதிலளித்து சென்றார்.