100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப் போவது எப்போது..? தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விட்ட திமுக ; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan30 September 2023, 12:00 pm
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது :- திமுக 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. குறிப்பாக கிராம மக்களுக்கு அட்சய பாத்திரமாக உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. ஒப்புக்குசப்பாக காரணத்தை சொன்னாலும், முழுமையாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தவில்லை என தமிழ்நாடு மக்கள் பேசுகிறார்கள்.
கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடைபடுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு விருதுகளை பெற்று தந்துள்ளோம்.
ஆனால், தேர்தல் காலகட்டத்தில் கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும், தமிழகத்தில் உள்ள 12,646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத காரணத்தால், மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டது மட்டுமல்ல, 520 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று பச்சைப்பொய் கூறும் முதலமைச்சர், இனியும் முதலமைச்சர் பதவியில் தொடரலாமா? என தமிழ்நாடு மக்கள் எழுப்பிய கேள்வி எழுப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு வந்ததா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்ற பச்சைபொய் சொல்லுகிற ஸ்டாலின் இனியும் முதலமைச்சர் பதவியில் தொடர்வதில் தார்மீக உரிமை இழந்து விட்டார் என தமிழ்நாடு மக்கள் பேசுகிறார்கள் என கூறினார்.
0
0