தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!

Author: Babu Lakshmanan
13 May 2024, 6:51 pm
Quick Share

‘தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது’ என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அன்னதானத்தை துவங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- எடப்பாடி அரசு வெற்றி சரித்திரத்தை பொறுத்துக் கொள்ளாமல் வயிற்று எரிச்சலிலே வாய் கொழுப்பு எடுத்து சில நபர்கள் சில புரளிகளை கிளப்புகிறார்கள். ஆதாரம் அற்ற மற்றும் பொய் செய்திகளை திட்டமிட்டு விஷமத்தன்மையோடு, வாய் கொழுப்போடு உளறினால் அந்த செய்திகள் எல்லாம் நீங்கள் முக்கியத்துவம் தர வேண்டாம்.

மேலும் படிக்க: ‘அட ஷவர் வசதியும் இருக்கா..?’ … கோவை வந்த சதாப்தி ரயிலில் ஒழுகும் மழைநீர் ; விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

இது மக்களிடத்திலே மட்டுமல்ல, தொண்டர்களிடத்தே குழப்பம் ஏற்படுத்துகின்ற விஷம பிரச்சாரம். இதை இத்தோடு முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்கள் நிறுத்திக் கொண்டால் அவருக்கும் நல்லது. ஏனென்றால் அவருக்கு தாய்ப்பால் கொடுத்த இயக்கம் அதிமுக. தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்றார் ரகுபதி, மிகப்பெரிய பாவச் செயலை செய்கிறார்.

சட்டத்திற்கு எல்லாரும் கட்டுப்பட்டவர்கள். ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தான் சட்டத்துக்கு முதல் முன்மாதிரியாக கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் அவரை சட்டத்திற்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறுவது வீராப்பு கதையை கட்டவிழ்த்து விடுவதாக தான் இருக்கும். இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அதற்கு சட்டம் அனுமதிக்காது.

இவரைப் போல் வீர வசனம் பேசுபவர் எல்லாம் அரசியல் களத்திலே காணாமல் போயிருக்கிறார்கள். அந்த நிலைமை இவருக்கும் ஏற்படலாம். காவல் அதிகாரி நிலக்கோட்டையிலே பாதுகாப்பு பணியில் உள்ள அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பு இல்லை. சொத்து பறிபோய் உள்ளது. இன்னும் எத்தனை பவுன் என்று தெரியவில்லை, எத்தனை லட்சம் என்று தெரியவில்லை, காவல் அதிகாரி வீட்டிலேயே பறிபோய் உள்ளது என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலைமை.

காவல்துறையை சுதந்திரமாக பணி செயல்பட வைத்தால் இது போன்ற சம்பவங்களை நடக்காமல் அவர்கள் தடுக்க முடியும். கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் வந்து மோடி இல்லை, அமித்ஷா என்று கூறுகிறார். அவர்களுடைய பிரதமரை அவர்கள் கட்சி தான் கூற வேண்டும். யார் பிரதமர், யார் மற்றவர் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து கெஜ்ரிவாலோ, வேறு யாரோ தீர்மானிக்க முடியாது, அவர் சிறைச்சாலையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளிவந்து மக்களுடைய கவனத்திற்காக பேசியிருக்கலாம்.

எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் சர்வாதிகாரத்திற்கு மக்கள் ஆதரவாக நிற்பதில்லை. யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வரலாம். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவில் பல தலைவர்கள் சாமானியர்கள் உருவாகியுள்ளனர். சர்வாதிகாரத்தை கொண்டு அடக்குமுறை கொண்டு இந்த நாட்டிலே ஜனநாயகத்தை காப்பாத்தி விடலாம் என்று நினைத்தால் அது பொய்த்து போய்விடும். இதற்கெல்லாம் சேர்த்து இந்த நாடாளுமன்றத் தேர்தல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள். ஜனநாயகத்தை மீறுபவர்கள் தண்டனையை அனுபவிப்பர், எனக் கூறினார்.

Views: - 160

0

0