கடமைக்கே என நடக்கும் கிராம சபை கூட்டம்…. இதுநாள் வரைக்கும் என்ன செய்திருக்கீங்க ; CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் விளாசல்

Author: Babu Lakshmanan
2 October 2023, 11:43 am

அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது ;- திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்படும். பொதுமக்கள் சுகாதாரத்திற்கு கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குடிசை வீடு பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் அமைத்து தொடர் பராமரிப்பை உறுதி செய்யப்படும். தமிழ்நாடு கிராம மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு கிராம மேம்பாட்டு முக்கிய தரப்படும், கிராமப்புறங்களில் சுய வேலைகளை உருவாக்க இளைஞர்களுக்கு எலக்ட்ரிஷன், பிளம்பர் போன்ற தொழிற்சார்ந்த பயிற்சிகள் வழங்குவதோடு, கால்நடை பாதிக்கும் கோமாரி போன்ற நோய்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் மலையடி வாரகிராமங்கள் மற்றும் மலைமேல் உள்ள கிராமங்களுக்கு சாலை, மின்சார வசதி, வீட்டு வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி என அனைத்து செய்து தரப்படும் என்று கூறி உள்ளனர். இப்போது அதன் நிலைமை என்ன? 

திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது போட்டி கிராம சபைகளை நடத்தினீர்கள், தற்போது நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களையும், தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கை முயற்சி எடுக்கவில்லை. 

தேசத்தந்தை மகாத்மா காந்தி  சொன்னது  போல ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் முன்னேற்ற அடையவேண்டும் என்று சொன்னால், கிராமப் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்கிற அடிப்படையிலே, புரட்சித்தலைவி அம்மா ஆண்டுதோறும் கிராமப்புற மக்களுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்களை வழங்கினார். இதன் மூலம் 2.32 லட்சம் பசு கன்று ஈன்றெடுத்து, அதன் மூலமாக பால் உற்பத்தி அதிகமாகி ஒரு பசுமை புரட்சி ஏற்பட்டது.

அதே போல ஒன்னறை லட்சம் பெண்களுக்கு, 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 90 லட்சம் வெள்ளாடுகள் இனப்பெருக்கம் ஏற்பட்டு கிராம பொருளாதாரம் உயர்ந்தது.  கிராமப்புற மக்களுக்கு அட்சய பாத்திரமாக இருந்த  இந்த திட்டத்தினுடைய நிலை என்ன?  கிராமப் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு  இருந்த திட்டத்தை ரத்து செய்வதோடு, நீங்கள் கொடுத்த அந்த தேர்தல் வாக்குறுதியான கிராமபுறங்களில் கல்வி வசதி, சுகாதார வசதி ,சாலை வசதி,, கழிப்பறை வசதி மருத்துவ வசதி ஏற்படுத்தி தரவில்லை.

தமிழ்நாட்டிலேயே இருக்கக்கூடிய 12,525 ஊராட்சிகளிலும், 17,656  மேற்பட்ட வருவாய் கிராமங்களில் நீங்கள் எந்த வளர்ச்சியும் செய்யவில்லை. இன்றைக்கு நடக்கும் கிராமங்கள் கூட்டம் கடமைக்காக எண்ணிக்கைக்காகத்தான் நடைபெறுகிறது.புரட்சித்தமிழர் எடப்பாடியார் கிராமப்புறங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று 2000 ஆண்டுகளுக்கு பழமையான குடிமராமத் திட்டத்தை செயல்படுத்தினார். இதன் மூலம் 1,132 கோடி மதிப்பீட்டில், 5,586 நீர் நிலைகளை தூர்வாரினார். இதன்மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்தது. 

அம்மா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு  திட்டத்தை போல, இந்த குடிமாரமத்து திட்டமும் ஒரு வரலாற்றுப் புரட்சியாக இருந்தது. இதன் மூலமாக இந்திய தேசத்திற்கே வழிகாட்டுகிற ஒரு திட்டமாக இருந்தது. இது போன்ற திட்டங்கள் மூலம் வேளாண்மை எடப்பாடியார் பாதுகாத்தார்.

ஆனால், நீங்கள் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்தீர்கள். அது மக்களை ஏமாற்றுகிற ஒரு வகையிலே தான் இருக்கிறது. இந்த வேளாண்மை அறிக்கையில் இந்த பலனும் மக்களுக்கு இல்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் பூஜ்ஜியம் தான் கிடைத்தது. அதேபோல் நிதிநிலை அறிக்கையில் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு எதுவும் இல்லை.

ஆகவே தான் இன்றைக்கு மக்கள் கேள்வி கேட்கிறார்கள், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த  திட்டத்தை எல்லாம் நீங்கள் முடக்கி வைத்திருக்கிறீர்கள். இது நியாயமா? அதனுடைய செயல்பாடு என்ன? அதனுடைய நிலை என்ன? கிராம சபை கூட்டங்கள் எண்ணிக்கை உயர்கிறதே தவிர, எந்த வளர்ச்சி திட்டங்களும் உயரவில்லை நிதியும் ஒதுக்கவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி பெறும் தொகுதியில் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று நீங்கள் பேசி உள்ளீர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக தோல்வியை பெறும், அப்படி என்றால் தோற்கப் போகும் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார் என்று கூறுனீர்கள், திமுக 40 தொகுதி தோற்க போகிறதே, அப்படியானால் உங்களை கட்சியில் இருந்து யார் நீக்குவது என்று கட்சிக்காரர்கள் பேசிக் கொள்கிறார்களே, அது உங்கள் காதுக்கு வருகிறதா?

மாவட்ட செயலாளர்களை நீக்குவதால் மட்டும் தேர்தலிலே வெற்றி பெற்றுவிட முடியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

காவிரி தண்ணீரை உங்களால் பெற்று தர முடியவில்லை, விலைவாசி உயர்வை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டம் ஒழுங்கை உங்களால் கையாள தெரியவில்லை. முல்லைப் பெரியாரில் பெற்ற சட்ட உரிமையை  உங்களால் நிலைநாட்ட முடியவில்லை. கட்ச தீவை உங்களால் மீட்க முடியவில்லை, இந்த தமிழ்நாட்டு மக்களை உங்களால் பாதுகாக்க முடியவில்லை.

ஆகவே தான் நீங்கள்  40 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தோற்பது உறுதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் பேசிக்கொண்டு இருப்பதை உங்களுக்கு வேண்டுமானால், உளவுத்துறை சொல்லாமல் இருக்கலாம், ஆனால் இன்றைக்கு மக்கள் பேசுகிற எதார்த்த உண்மை இதுதான் என்பதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மக்களுக்கு சேவை செய்யாமல், மக்களுக்காக உழைக்காமல், தன் வீட்டு மக்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

ஆகவே காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்துகிற இந்த நாளிலாவது கிராமப்புற முன்னேற்றத்திற்காக, கிராமப்புற வளர்ச்சிக்காக, கிராம பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக ஏதேனும் நிதி ஒதுக்க நீங்கள் முன் வருவீர்களா?, கூறினார்

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 510

    0

    0