தமிழகத்தில் மன்னராட்சி… மகனுக்கு நாளை பட்டாபிஷேகம்… வரிகளை தள்ளுபடி செய்வாரா முதலமைச்சர் ஸ்டாலின் ; செல்லூர் ராஜு கேள்வி

Author: Babu Lakshmanan
13 December 2022, 5:41 pm

மதுரை ; உதயநிதி பதவியேற்பால் மக்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் வழங்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. தொண்டர்கள் தான் கழகத்தை உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை கூறி நிறைவேற்றாத அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில் தான், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலையால் தான் மக்கள் அலை அலையாய் அதிமுக போராட்டத்திற்கு வந்துள்ளனர். அதிமுக மட்டுமே மக்கள் இயக்கம். மக்கள் நலனுக்கான இயக்கம். ஜெயலலிதா சொன்னது போல அழிக்க முடியாத வரியாக அதிமுக நூறாண்டு செயல்பட உள்ளது. தியாகிகளை கொண்ட இயக்கம் அதிமுக. தன்னலமில்லாத தலைவர்களை கொண்ட இயக்கம் அதிமுக.

மக்கள் தான் எஜமானர்கள். ஜனநாயகத்தின் இறுதி காவலர்கள் மக்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் திமுகவினர். மகளிர்க்கு 1000 ரூபாய், கேஸ் மானியம், கல்வி கடன் ரத்து, விலைவாசி உயர்வு எதையுமே செய்து தரவில்லை. கொத்தடிமைக்கு கொத்தடிமையாக முதல்வர் இருந்து கொண்டு நம்மையும் கொத்தடிமையாக வைத்துள்ளனர்.

சினிமாக்காரர்கள் தான் சோப்புக்கும், மற்றவைக்கும் மாடலாக வருகிறார்கள். முதல்வர் மாடல் எனக்கூறி அசிங்கப்படுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியின் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பதாக கூறிய முதல்வர் தற்போது 54% உயர்த்தியுள்ளார். சொத்துவரிக்கு வீட்டையே விற்கும் நிலை உள்ளதாக பேசிய ஸ்டாலின் இன்று சொத்துவரியையும் உயர்த்தியுள்ளார்.

திமுக ஆட்சியில் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது. முதல்வரோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் இன்றைக்கு பக்கவாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் இருக்கும் வரை உதயசூரியன் தான் உதிக்கும் எனக் கூறுகிறார். உதயசூரியன் எரிக்கத்தான் செய்யும். மக்களுக்கு வெயிலை கொடுப்பதை போல ஆட்சியை கொடுத்து கொண்டுள்ளனர்.

தமிழக மக்கள் படும் துயரம் போதாதாம். புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார். இங்கே நடக்கும் கொடுமைகள் போதாதா? கொடுமையிலும் கொடுமையாக புதுச்சேரி மக்களும் துன்பப்பட நினைக்கிறார்.

திருக்குவளை மு.கருணாநிதி குடும்பம் தான் திமுக. திமுக ஸ்டாலினின் பிரைவேட் கம்பெனி போல மாறிவிட்டது. நாளை உதயநிதியின் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மகனுக்கு பட்டாபிஷேகம் செய்வதால் ஸ்டாலின் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்னைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது, முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள். முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

அதிகார தெம்பில், போதையில் இதையெல்லாம் ஸ்டாலின் செய்கிறார். சென்னை முதல் குடிமகளான மேயரை தொங்கவிட்டு முதல்வர் காரில் வசதியாக செல்கிறார். சர்வாதிகார ஆட்சி போல திமுக ஆட்சி உள்ளது. ஒரு நாள் இரவு பயணத்துக்கு லட்சக்கணக்கான தொகையை கொடுத்து ரயில் பயணம் செய்கின்றனர்.மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.

மகனுக்கு முடிசூட்டும் நிகழ்வால் ஸ்டாலின் மக்களுக்கு இனிப்பான செய்தியை கொடுக்கட்டும். பொங்கலுக்கு தரமான பொருட்களை அதிமுக கொடுத்தது. திமுக அல்வா தான் மக்களுக்கு கொடுத்தது. வாயிலேயே அல்வா கிண்டும் ஆட்சியாக திமுக உள்ளது. இவ்வளவு பிரிவினைகள் வந்தும் அதிமுகவினர் கட்சி மாற மாட்டார்கள்.

புடம்போட்ட தங்கங்கள் அதிமுக தொண்டர்கள். தலைவர்கள், நிர்வாகிகள் மாறுவார்கள். ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். அதனால் தான் எம்ஜிஆரை பெரியப்பா என பேசி பார்க்கிறார் ஸ்டாலின். அதிமுக எப்போது பார்த்தாலும் கூட்டமாக இருக்கிறார்கள். எடப்பாடி தலைமையில் ஒன்றாக இருக்கிறார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார்.

எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியவில்லை. ஸ்டாலின் அவர் அப்பா பெயரை சொல்லி பேசுகிறாரா. எம்ஜிஆர் பெயரை சொல்லி தான் பேசுகிறார். தேர்தல் விரைவில் வர உள்ளது. திமுகவுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கிய அதிமுக எங்கே. எது குறித்தும் விவாதிக்காமல் திமுக உள்ளது. திமுகவும் வன்முறை, அரசின் காவல்துறையும் வன்முறை செய்கிறது.

நாலு ப்ளக்ஸ் வைத்தால் தான் எதிர்க்கட்சி. கட்சிக்காரர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்த ப்ளக்ஸ் வைக்கின்றனர். காவல்துறையினர் அதிமுகவை சீண்டிப்பார்க்காதீர்கள். தேனீக்கள் போல நாங்கள் அமைதியாக இருப்போம். பிறகு கொட்டி விடுவோம், எனக் கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 517

    0

    0