திமுக தங்கம் தங்கமாக தூக்கி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டங்க… இந்தமுறை அதிமுக வெற்றி உறுதி ; செல்லூர் ராஜு..!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 2:11 pm

திமுகவினர் தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் தங்கம் தங்கமாக வீட்டுக்கு கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 52வது துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட அதிமுக கொடியை ஏற்றி கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கினார்

தொடர்ந்து மதுரை கேகே நகர் பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர், எம்ஜிஆரும், அதிமுகவும் அதிமுக கொண்டு வந்த எண்ணற்ற பல திட்டங்கள் குறித்தும் எடப்பாடியார் காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் குறித்து அன்றைக்கு ஒவ்வொருவரும் எள்ளி நகையாடிய நிலையில், அவற்றையெல்லாம் தாண்டி தற்போது 50 ஆண்டுகளில் கடந்து 52வது ஆண்டில் அதிமுக பயணிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டு வந்தது அதிமுக.

தொண்டர்கள் ஒன்றுபட்டு வாழ்வோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடியார் கரத்தில் ஒப்படைப்போம். அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கலைஞர் அனைத்து மக்களுக்கும் தொலைக்காட்சி கொடுத்தார். அனைத்து குடும்பத்தினருக்கும் தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது போல அவர் கொடுத்தார். அதேபோன்று ஜெயலலிதா அவர்கள் சொன்னது போல அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்.

அரசு கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தது அதிமுக. கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள ஏழை, எளிய மக்கள் உணவருந்த கூடிய வகையில், விலையில்லா அரிசியை கொடுத்தது அதிமுக, எனக் கூறினார்.

திமுக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமம் தொகை குறித்த கேள்விக்கு பதில் அளித்ததாவது :- என்னதான் திமுக ஆட்சி தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் சரி, தங்கம் தங்கமாக வீட்டுக்கு கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். சதுரங்க வேட்டையில் உள்ளது போல தமிழக முதல்வர் அவர்கள் பொய் வாக்குறுதி கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஏமாற தயாராக இல்லை. அவர்கள் அதிமுகவிற்கும், அதிமுகவின் கூட்டணிக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள், என்றார்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!