குஜராத் போல நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கனுமா..? அது பாஜக கையில்தான் இருக்கு ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு
Author: Babu Lakshmanan9 December 2022, 4:07 pm
மதுரை ; குஜராத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை பரவை பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசியதாவது;- குஜராத்தை பொருத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி உள்ள சொந்த ஊர். எனவே, அவருக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால், அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
எனினும், கூட்டணி அமைவதை பொறுத்தவரைதான் பாஜக வெற்றி பெரும். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிற கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெறும். அது பாஜக கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அது அவரது விருப்பம். அதிமுகவிலிருந்து கட்சி மாறியவர்கள் கூட திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். கட்சி மாறியவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, எனக் கூறினார்.