‘அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டிப்போம்’ ; அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய செல்லூர் ராஜூ..!!
Author: Babu Lakshmanan16 September 2023, 2:15 pm
அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டிப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை பந்தடி ஐந்தாவது தெருவில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விழா மேடையில் பேசியதாவது :- அண்ணா அவர்களையும், எம்.ஜி.,ஆர் அவர்களையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும், ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள்.
அண்ணா மீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டு இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப் படுத்துவார். கட்சியில் 28வது இடத்தில் இருந்தவர் டாக்டர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார்.
ஆனால், தற்போது கலைஞர் குடும்பம் திமுகவை குடும்ப கட்சியாக வைத்துள்ளார். அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடுனதும், நான் தான் முதலமைச்சர் என்று சொல்கின்றனர்.
சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர். உடனடியாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் ஏரியாவாக மாற்றுக்கின்றனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு தான் உரிமை உண்டு. திமுகவினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர்.
கலைஞர் கருணாநிதிக்கு மகன் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறார். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலி பேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான்.
நாங்கள் கூட கலைஞரை தற்போதும் மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மத்தாப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள்.
அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும். பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு காரணம் பெரியார், அண்ணா அவர்கள் தான் காரணம். அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை திமுக மூடுவிழா கண்டுவருகிறது. எனவே, அண்ணாவின் வாரிசு நாம் தான், எனக் கூறினார்.