6வது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… கெடு விதித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. திமுகவினர் ஷாக்..!!
Author: Babu Lakshmanan28 February 2024, 11:32 am
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது, அமைச்சர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை பயன்படுத்தி, சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்ற அமலாக்கத்துறையின் முறையீடு, தற்போது செல்லாததாகி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்று அமலாக்க துறை தரப்பில் வாதிட்டப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும், 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால், வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 3 மாதத்தில் வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறை, உயர்நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.