ஷர்மிளாவின் துணிச்சலுக்கு பாராட்டு… உங்களின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டுவிட்!!
Author: Babu Lakshmanan3 April 2023, 10:01 am
கோவை : கோவையின் முதல் பெண் ஓட்டுநருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம், சோமனூர் வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநராக உள்ள ஷர்மிளா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பேருந்தை அசால்ட்டாக வளைத்து ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் நகர்கின்றனர். கோவையில் முதல் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையுடன், காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த செல்வி ஷர்மிளாவை பாராட்டி முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவும் எஸ்பி வேலுமணி கௌரவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவை வடவள்ளியைச் சேர்ந்த செல்வி ஷர்மிளா, தனியார் பயணிகள் பேருந்தை இயக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஓட்டுனர் தொழில் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும், அவரின் துணிச்சலையும் பாராட்டுவதோடு, அவரின் லட்சியம் நிறைவேறவும், வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடையவும் அவரை வாழ்த்துகிறேன்,” என தெரிவித்துள்ளார்.