ஒரு அமைச்சரையும் காணோம்.. வாக்காளர்களை அடைத்து வைத்து புதுப்படமா போட்டு காட்டுறாங்க ; வைகைச் செல்வன் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan22 February 2023, 6:22 pm
சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாக சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்து பேசினார்.
இதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் புதிய பார்முலாவை திமுக கடைபிடித்து வருகிறது. வாக்காளர்களை காலை முதல் அடைத்து வைத்து, மாலை வரை அமரவைத்து வாக்காளர்களை சித்திரவதை செய்து ஜனநாயக படுகொலையை திமுக செய்து வருகிறது. திமுகவினர் வாக்காளர்களை சந்தித்து வாக்குசேகரிங்கள், செய்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பதை விட்டுவிட்டு, வாக்காளர்களை பட்டியில் ஆடுமாடு போன்று அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றனர். தினசரி வாக்காளர்களை திமுகவினர் சித்தரவதை செய்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய பார்முலாவை கொண்டு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் அதிமுக கிடைத்துள்ளது. பணக்காரர்கள் மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியும் என்ற நிலை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நிலையில், சாமானிய நபரும் உயர்ந்த நிலைக்கு சென்று, ஜனநாயக கடமை ஆற்றமுடியும் என்று அறிஞர் அண்ணா செய்து காட்டினார்.
ஒரு பெரிய கம்பெனி, மாநிலத்தை குத்தகை எடுத்து கார்ப்பரேட் கம்பெனி ஆக மாற்றி, வேண்டியவர்கள் எல்லாம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி, அதிகளவில் பணம் செலவு செய்தால் அனைத்தும் நடந்துவிடும் என்ற புதிய கணக்கிற்கு திமுக வித்திட்டு உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் அனைத்தும் பறித்துவிட்டனர்.
மின்சார கட்டணஉயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளை போன்று யாரும் கேட்க முடியாத அளவிற்கு சர்வாதிகார ஆட்சியாக திமுக மலர்ந்துவிடும் என்று மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக முறையிட்ட நிலையில், இதுவரை பதில் வரவில்லை. அதிமுக மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறது. எளியமுறையில் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் திமுகஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் கிழக்கு தொகுதியில் பணமழை பெய்து வருகிறது.
ஒருமாத காலமாக தலைமைச் செயலகத்தில் திமுக அமைச்சர்கள் இல்லை. அவர்களது வேலைகளை எல்லாம் யார் செய்வார்கள், பண பட்டுவாடாவில் அவர்கள்தான் அதிகம் ஈடுபடுவார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உணர்ச்சிவசமாக சொன்னார். மீசை வைத்த ஆண் மகனாக இருந்தால் நேரடியாக தேர்தல் களத்தில் மக்களை சந்தியுங்கள். ஆனால் சந்திக்காமல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று கேட்டார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து கனிமொழி உள்ளிட்டோர் அவதூறாக பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி உணர்ச்சி பிளம்பாக அந்த இடத்தில் சொல்லிவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நேர்மையாக நடைபெறவில்லை. அநீதியை கையில் எடுத்துக்கொண்டு, அராஜகத்தின் மொத்த உருவமாக உள்ள திமுக, அதன் அமைச்சர்கள் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி கொண்டு நீதியை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார்கள், என்று குற்றம்சாட்டினர்.