நில அபகரிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்; திருச்சி சிறையில் அடைப்பு;15 நாள் காவல்

Author: Sudha
17 July 2024, 8:43 am

நில மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2 மணிக்கு அவரை அழைத்து வந்தனர்.அங்கு அவரிடம் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவருக்கு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.

மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி பரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், அவருடன் கைது செய்யப்பட்ட பிரவீன் கரூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith fans criticize ilaiyaraaja in strong words for giving notice to good bad ugly “இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?