நீட் தேர்வுக்கு விலக்கு? மாணவர்களின் நலன் கருதி நாங்க அதை செய்வோம் : அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்வது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan8 October 2022, 7:21 pm
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டுவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என கூறினார்.
LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அரசாணை எண் 149 குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்
அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம் என விளக்கமளித்த அவர், போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பிற இடங்களில் வழக்கம் போல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும், மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.