மியான்மரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு ; அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 8:33 pm

மியான்மரில் வேலைக்காக சென்று சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது.

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மரில் சர்வதேச கும்பலிடம் 13 இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, மத்திய அரசு வெளியுறவுத்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தனர்.

இந்த நிலையில், மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றடைந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், கடந்த மாதம், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களின் கூட்டு முயற்சிகளால் மியாவாடியில் இருந்து 32 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதற்கு நன்றி.

சில இந்திய குடிமக்கள் தங்கள் போலி முதலாளிகளினால், அந்த நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மியான்மர் அதிகாரிகளின் காவலில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வேலை மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, மோசடியில் ஈடுபட்ட முகவர்கள் குறித்த விபரங்கள் பல மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. லாவோஸ் மற்றும் கம்போடியாவிலும் இதுபோன்ற வேலை மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி