காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. தலைமறைவான ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan7 March 2023, 9:43 am
கோவை : கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு வந்த நபர் காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் காவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சத்தியபாண்டி என்பவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சத்தியபாண்டியை மற்றொரு கும்பல் முன்விரோதம் காரணமாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டும், அறிவாள் போன்ற ஆயுதங்களால் துரத்தி துரத்தி வெட்டியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் சென்னை அரக்கோணம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தனர்.
மேலும், இதில் சஞ்சய்ராஜா என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. சஞ்சய் தலைமறைவாக இருந்த நிலையில், அவரைப் போலீசார் கோவை மற்றும் கர்நாடக பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சஞ்சய் சென்னை எக்மோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனை தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சஞ்சய்ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் கூறியுள்ளார். இதையடுத்து, துப்பாக்கியை எடுக்க காவலர்களை கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, சஞ்சய் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பி ஒரு மரத்தின் பின்னால் மறைந்திட அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காத்துக் கொள்வதற்காக சஞ்சய்ராஜாவின் இடது கால் முட்டியின் கீழ் காவலர் துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார்.
இதனையடுத்து சஞ்சய் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே தவற விட்டு விழுந்திட காவலர்கள் சஞ்சயை பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.