நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போடுங்க : மக்கள் போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2022, 11:43 am
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறவர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளிக்கச் சென்ற வன வேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியனை தீண்டாமை நோக்கத்தோடு, நாற்காலியில் அமர வைக்காமல் நிற்க வைத்ததுடன், ஒருமையில் பேசியுள்ளார். மேலும் அவருடன் சென்ற திமுக எம்பி தனுஷ்குமார் அவர்களையும் நிற்க வைத்து பேசியுள்ளார். அவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி அமைச்சர் நடந்து கொண்டதாகவும், திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை கண்டித்து தேனி வள்ளி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறவர் என ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.
மேலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என கோஷங்களையும் எழுப்பினர்.
இது குறித்து குறவர் இன மக்கள் கூறும்போது, இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணம் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் தான் என்றும்,அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அழைத்துச் செல்வதாக வெறுமனே அலைக்கழித்து வந்தார்.
இது தொடர்பாக மனு அளிக்கச் சென்ற எங்கள் சமூகத் தலைவர் இரணியனை நாற்காலியில் அமர விடாமல் நிற்க வைத்து ஒருமையில் பேசி அவமதித்து விட்டார்.
மேலும் நரிக்குறவர் சமூகம் என்பது வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நாங்கள் தமிழகத்தில் பூர்வ குடி மக்கள், வள்ளியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது சாதிப்பெயர் திரும்ப கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்,
பல நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்திய அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதே வேறு ஏதாவது சமூகம் போராட்டம் நடத்தியிருந்தால் இந்நேரம் நேரடியாக சென்று பார்த்திருப்பார்கள்.நாங்கள் தீண்ட தகாத மக்களா?
இதே நிலை நீடித்தால் அரசாங்கம் எங்களுக்கு அளித்துள்ள ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைப்போம், எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்று தெரிவித்தனர்.