பழி வாங்க போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு போடுவதா? திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 1:57 pm

என்எல்சிக்கு எதிராக போராடிய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்தற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிரான நிலப்பறிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறை பொய்வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

அவ்வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிற்கும்படி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. கரிவெட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் விளைநிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை.

ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரக்கூடிய அந்த நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறிக்க என்.எல்.சி துடிக்கிறது; அரசு எந்திரத்தை ஏவுகிறது.

என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகார அத்துமீறலில் இருந்து தங்களின் வாழ்வாதாரமான நிலங்களைக் காக்க மக்கள் போராடுகின்றனர்.

அது அவர்களின் உரிமைப் போராட்டம். அதை அரசு மதிக்க வேண்டும். அதற்கு மாறாக உரிமைக்காக போராடும் மக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்து பழிவாங்கக் கூடாது.

நில உரிமைக்காக போராடும் பெண்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைய வைத்தால் பெண்கள் அஞ்சி விடுவார்கள்; அதன் பின்னர் போராட முன்வரமாட்டார்கள் என்று என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் நினைக்கிறது.

அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. எந்த உரிமையை பறித்தாலும் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். வாழ்வுரிமையை பறிப்பதை கடலூர் மாவட்ட மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பந்தை அடிக்க அடிக்க எவ்வளவு வேகத்தில் எழும்புமோ, அந்த அளவுக்கு அடக்குமுறையை அரசும், என்.எல்.சியும் கட்டவிழ்த்து விட, விட மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடையுமே தவிர, ஒருபோதும் ஓயாது. ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும். தங்களின் நிலங்களைக் காக்க தங்களுக்கு உரிமை உண்டு என்ற மக்களின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டும். அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படாது;

என்.எல்.சி வெளியேற்றப்படும் என்று அறிவிப்பதுடன், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய்வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். இவை சாத்தியமாகும் வரை என்.எல்.சிக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!