தூத்துக்குடி செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நாளை மறுதினம் மக்களை சந்திக்கிறார்!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2023, 11:53 am
தூத்துக்குடி செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நாளை மறுதினம் மக்களை சந்திக்கிறார்!!
கடுமையான மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதித்தன. மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகள் முழு அளவில் சகஜ நிலைக்கு வரவில்லை.
வானிலை ஆய்வு மையம் முறையாக எச்சரிக்க தவறிவிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. ஆனால் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை. முதலமைச்சரே இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்கு சென்றுவிட்டார். மத்திய அரசு உடனடியாக ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டது. மழை நீர் வடிகால் ஓடை அமைக்க கொடுக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை முறையாக செலவிடவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பாக புகார் கூறினார்.
அவரது இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வெள்ள நிவாரண நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட செல்கிறார். தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்க்கிறார்.
ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வுசெய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளது. இதற்கிடையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, விரைவில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கும் என்று குறிப்பிட்டார். எனவே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நிர்மலா சீதாராமன் நிவாரண நிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.