அன்றைக்கு அரசியல் செஞ்சது யாரு…? ஸ்டாலின் சொன்னதை வைத்து மடக்கிய பாஜக…! திமுக அமைச்சருக்கும் ‘செக்’!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 8:55 pm

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியாவுக்கு நேர்ந்த துயரம், தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டுள்ளது. மாநிலத்தின் பிரபல
கால்பந்து வீராங்கனையான பிரியாவின் அசாதாரண மரணம் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு பலத்த எச்சரிக்கை மணியையும் அடித்து இருக்கிறது.

வீராங்கனை பலி

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது வலது காலில் ஏற்பட்ட தசை பிடிப்பின் காரணமாக உருவான மூட்டு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்த பிரியா, சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொண்டபோது அவரது கால் மூட்டு பகுதிக்குள் இருக்கும் ஜவ்வு கிழிந்து போய் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பிறகு அதே மருத்துவமனையில் அவருக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தும் வலி குணமாகாதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரியாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருடைய காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறி டாக்டர்கள் வலது காலை அகற்றியுள்ளனர்.

தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு கடுமையான ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் இரு தினங்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவி பிரியா மரணமடைந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வேண்டுகோள்

இது அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்பதை யூகித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ” கால்பந்து வீராங்கனை பிரியா விவகாரத்தில் சட்டப்படியும், விதிகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு
10 லட்ச ரூபாய் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சை அளித்ததில் கவனக்குறைவாக செயல்பட்ட 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மருத்துவர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட மிகவும் துயரமான சம்பவம்; வீராங்கனை பிரியாவின் இறப்பை அரசியலாக்க வேண்டாம். துயர சம்பவத்தை மேலும் தூண்டி விட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

Minister Subramanian - Updatenews360

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் மரணம் அடைவது அவ்வப்போது நிகழக் கூடிய ஒன்றுதான். அதனால் இறந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபடுவதும் உண்டு. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது வழக்கம்.

ஆனால் டாக்டர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் கல்லூரி மாணவி என்பதோடு கால்பந்து வீராங்கனையும் ஆவார் என்பதால் அமைச்சர் சுப்பிரமணியன் அரசியல் கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகோள் நியாயமான ஒன்றாகவே கருதப்பட்டது.

என்றபோதிலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூவரும் திமுக அரசை கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டனர்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி கே வாசன் ஆகியோர் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்று திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில்தான் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தங்களது கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மாணவி பிரியாவின் மரணம் தொடர்பாக திமுக அரசை வன்மையாக கண்டித்தது நியாயமான செயல்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் நான்காண்டுகளுக்கு முன்பு, அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக நடந்த ஒரு செயலுக்காக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொந்தளித்து தெரிவித்த கருத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

சொன்னது நீ தானா சொல் சொல் சொல்?

அது எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசை சாடியது சரிதான் என்று கூறுவது போல அமைந்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி வெளியிட்ட அந்த பதிவில், “2018-ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகாரத்தை குறிப்பிட்டு ரத்தம் கொதிக்கிறது என்ற தலைப்பில் ஸ்டாலின் இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று அப்போதைய அதிமுக அரசை கண்டித்து கேள்வி எழுப்பியது இடம் பெற்று இருந்தது.

அதை அப்படியே நகல் எடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது இணைத்துள்ள நாராயணன் திருப்பதி, “இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது. இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே?…
இது ஊழல் அரசு என்பதையும், உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா, முதலமைச்சர் அவர்களே?… சொன்னது நீ தானா சொல் சொல் சொல்? என்ற பாடல் வரிகளுடன் கிடுக்குபிடி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அவியலா செய்யும்?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: “ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தனது ஆர்ப்பாட்டங்கள் பலவற்றில் பேசிய ஒரு வசனம்தான், நினைவிற்கு வருகிறது. குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் விதமாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 2020-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் 30 நாட்களுக்கும் மேலாக இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை அருகே அக்டோபர் மாதம் திமுக போராட்டமும் நடத்தியது. அப்போது இப் பிரச்சினையில் திமுக அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். அதற்கு ஸ்டாலின், நான் கேட்கிறேன், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? என்று
கேள்வி எழுப்பியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அவருடைய வசனத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கெட்டியாக பிடித்துக்கொண்டு விட்டன.

நாராயணன் திருப்பதியின், பதிவு பாஜகவினரால் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் திமுகவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதும் உண்மை. நம் தலைவர் சொன்னதை வைத்தே பாஜகவினர் நம்மை மடக்குகிறார்களே? என்ற மனக்குமுறலும் அவர்களிடம் வந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதேநேரம் கல்லூரி மாணவி பிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனை, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிக்குள் இருப்பதால்
திமுக அரசு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொளத்தூர் தொகுதியின் பல இடங்களில் மழைநீர் தேங்குவதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. மேலும் அந்த தொகுதிக்கு உட்பட்ட நீர் நிலையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டி இருக்கிறது.

எனவே அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையை உறுதி செய்வதுடன் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 453

    0

    0