பிரியா உயிரிழந்த விவகாரம் ; ஜாமீன் மறுத்த நீதிமன்றம்… தலைமறைவான மருத்துவர்கள்.. 3 தனிப்படைகளை அமைத்து தேடும் போலீஸ்!

Author: Babu Lakshmanan
19 November 2022, 9:33 am

சென்னை : தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவான மருத்துவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜவ்வு விலகியதற்காக அரசு மருத்துவனையில் சிகிச்சைக்கு சென்ற போது, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், இந்த சம்பவத்தை, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என தெரிவித்த பெரவள்ளூர் போலீசார் மருத்துவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு அறுவை சிகிச்சைக்களை வெற்றிகரமாக செய்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் போலீஸில் சரணடைவதில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை விசாரித்த சென்னை நீதிமன்றம், மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஆகியோர் தலைமறைவாகினர்.

இந்த நிலையில், வழக்கில் தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!