நமது அம்மா நாளிதழில் மருது அழகுராஜ் பணமோசடி… ஓபிஎஸிடம் வாங்கியக் கூலிக்கு வேலை செய்கிறார் : ஜெயக்குமார் காட்டம்..!!
Author: Babu Lakshmanan5 ஜூலை 2022, 11:54 காலை
நமது அம்மா நாளிதழில் பணியாற்றிய மருது அழகுராஜ் பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், கடந்த ஜுன் மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் வரை சென்று, பொதுக்குழுவில், ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட 23 தீர்மானங்களை தவிர, வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவை பெற்றனர்.
இது இபிஎஸ் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உள்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான் மருத அழகுராஜ் செய்துகொண்டு உள்ளார். கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கட்சிக்காக தியாகம் செய்துள்ளாரா? ஜெயிலுக்கு சென்றிருக்காரா? எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் விசுவாசம் கொண்டவரா என்றால் அதுவும் இல்லையே.
மருது அழகுராஜ் அவர் போகாத கட்சியே இல்லை. நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் பொறுப்பாசிரியராக இருந்தபோது, அங்கேயும் நிதி கையாடல் முறைகேட்டில் மருது அழகுராஜ் ஈடுபட்டார். நமது அம்மாவில் இணைந்த பின்பு அங்கும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டார். நமது அம்மா பத்திரிக்கை விளம்பர வருமானங்களை கணக்கில் வராமல் முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளார்.
பாமக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தார் அதற்கான விளம்பரம் நமது அம்மா நாளிதழில் வந்தது. விளம்பர பணம் 60 ஆயிரம் ரூபாய் அது கணக்கில் வரவில்லை முழுமையாக பணத்தை மருது அழகுராஜ் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக நமது அம்மாவில் இருந்து விலகி வைக்கப்பட்டவர்.
தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டு கட்சியின் மீது கலங்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். பொதுக்குழுவில் அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஏறக்குறைய 95 சதவீத உறுப்பினர்களுக்கு மேலே உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் அசிங்கப்படுத்தும் வகையில் சேற்றை வாரி வீசும் வகையில் பேசியுள்ளார், எனக் கூறினார்.
0
0