தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடக்கிறது… ஹிட்லர், முசோலினி மறு உருவம்தான் ஸ்டாலின் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan12 March 2022, 9:28 am
சென்னை : ஹிட்லர், முசோலினி மறு உருவமாக ஸ்டாலின் திகழ்வதாகவும், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறப்படும் திமுக பிரமுகரை தாக்கியதாக கைது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், கொலை முயற்சி,
நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளில் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், நேற்றைய தினமே ஜாமீனில் வெளியே வருவார் என்று அதிமுக தொண்டர்கள் அவரை வரவேற்க சிறை வளாகம் முன்பு மேளதாளத்துடன் திரண்டிருந்தனர்.
ஆனால், இரவு 7 மணி ஆகியும் ஜாமீன் பிணை ஆணை மற்றும் உத்தரவாதக் கடிதம் முறைப்படி சிறை வளாகத்தில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆனதால் நேற்று அவர் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், இன்று காலை அவர் புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, புறாக்களை பறக்க விட்டும், திருஷ்டி கழித்தும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிமுகவின் எழுச்சியை பொறுக்காமல் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதிலேயே உள்ளார். சட்டத்தில் கையில் எடுத்து அதிமுகவை ஒடுக்க வேண்டும். நசுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஹிட்லர், முசோலினி மறு உருவமாக ஸ்டாலின் திகழ்கிறார். ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சூரையாடி கொண்டிருப்பதை திமுகவின் அவலங்களை எடுத்துச் சொல்லி வரும் என்னுடைய 100 குரல், மீண்டும் பத்தாயிரம் குரலாக எதிரொலிக்கும். எத்தனை வழக்கு போட்டாலும், அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. அச்சுறுத்தலாம் என்ற தீய எண்ணத்தில் என் மீது பொய் வழக்குப் போட்டனர்.
ஜனநாயகத்தில் கருத்து மோதல்கள் இருக்கலாம். வாங்க பேசலாம். ஆனால், அதைத் சகித்துக் கொள்ள முடியாமல் பொய் வழக்குப் போடுவது எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் கீழே இறங்கி போயிருக்கிறார்கள். மினி எமர்ஜென்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
என்னை சிறையிலிருந்து ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் காலதாமதம் செய்ததற்கு வழக்கு தொடர உள்ளது. ஏய்ப்பவனுக்கே காலம் என்று எண்ணி விடாதே பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே என்ற பாடலைப் பாடி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். சிறையில் வந்து சந்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.