ஆளுநர் சொன்னதைப் போல தமிழகத்தில் விரைவில் ராமராஜ்ஜியம்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

Author: Babu Lakshmanan
4 April 2022, 9:04 am

தமிழகத்தில் விரைவில் ராமராஜ்ஜியம் நடக்கும், எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 5ம் தேதி அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் 5-ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. வாக்களித்த மக்களுக்கு எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு துரோகம் செய்தது கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொங்கல் தொகுப்பு,பொங்கல் பரிசு இவை எதுவும் இல்லாமல் செய்துவிட்டனர்.

மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா குடிநீர் திட்டம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் இவை தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சொத்து வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியதற்கே எதிர்க்கட்சியாக இருந்த திமுக, இன்றைய முதல்வர் ஸ்டாலின், இது வரி உயர்வா அல்லது சொத்து அபகரிப்பா என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்ட போது, மக்கள் சாதாரண நிலையில் சுபிட்சமாக நன்றாக இருந்தார்கள். இருந்த போதும் அதிமுக வரியை உயர்த்தாமல் எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்று உயர்த்தவில்லை.

2018 அதிமுக ஆட்சியில் ஊரக தேர்தல் நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட சமயத்தில் வரி விதிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காக வரி விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது ஊரக நகர்ப்புற தேர்தல்கள் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு என்பது மாவட்ட, மாநகர எல்லைக்குள் மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டிய நிலையில், அதிகாரத்தை அரசு தன் கையில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை அறிவித்துள்ளது முற்றிலும் தவறானது.

திமுக அரசு கடந்த 11 மாத காலமாக மக்களுக்கு விரோதமான செயல்களையே செய்து கொண்டுள்ளது. அந்த வரி உயர்வும் தற்போது உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், ஒரு பீப்பாய் குரூடு ஆயில் விலை 83 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றும், போர் நடப்பதால் தற்காலிகமாக விலையேற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. பெட்ரோல் டீசல் விலையை மூன்று ரூபாய் குறைப்பதாக ஏதோ கண்துடைப்புக்காக கூறினார்கள். கொரோனா காலகட்டத்தில் 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தியது சரியா? பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு காரணம் சொன்னார்கள். இவர்கள் என்ன காரணம் சொன்னார்கள்.

ஊரக நகர்புற பிரதிநிதிகள் மாநகராட்சி கூட்டங்களில் வரிவிதிப்பு தீர்மானங்களை நிறைவேற்றி அதையே மக்களுக்கு பரிசாக கொடுக்க போகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு கிடையாது. திமுக – காங்கிரஸ் கூட்டணியின் போது தான் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த தனி அமைப்பு தொடங்கப்பட்டு, அந்த அமைப்பு தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை உயர்த்தவில்லை.

மக்களுக்கு பாதகமான அனைத்தையும் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே கொண்டு வந்தனர். பிப்ரவரி 31-ஆம் தேதிக்குள் வரியை உயர்த்த வேண்டும் என நகர்புற அமைச்சர் சொல்வது வேடிக்கையாக உள்ளது. பிப்ரவரி 31 எந்த ஆண்டில் வருகிறது. முழுக்க முழுக்க நகர்ப்புற அமைச்சர் பொய் கூறுகிறார். நிதியமைச்சர் வரியை உயர்த்த வேண்டும் என கூறியதால், என்ன செய்வதென்று தெரியாமல் நகர்புற அமைச்சர் குழம்பிப் போயுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வு தான் திமுக மக்களுக்கு கொடுக்கும் பரிசு.முழுக்க முழுக்க சொத்து வரி உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும். கொரானா முடிந்த பிறகுதான் வரி உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும். திமுக அரசின் சொத்து வரி உயர்வை அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போகிறேன் என்பது போலத்தான், 2024 திமுக அதன் கூட்டணிகள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என கூறுவது, எனத் தெரிவித்தார்.

பாஜகவுக்கு அடிமையாக செல்ல மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஸ்டாலின் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு அங்கே என்ன செய்தார் என தெரியும். முதல்வர் ஸ்டாலின் டெல்லி போவதற்கு முன் ஆர்.எஸ் பாரதி ஒன்றிய அரசு எனக் கூறிய நிலையில், மத்திய அரசு என கூறினார். இனிமேல் தான் திமுக பற்றி தெரியும்.

எங்கள் முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாடு போனால் கிண்டல் செய்வது. ஆனால் ஸ்டாலின் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது. இதையெல்லாம் கேலி கிண்டல் செய்ய மாட்டார்களா என அவருக்குத் தெரியாதா?, எனக் கூறினார்.

ராமராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவதாக தமிழக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு, பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராமராஜ்ஜியம். எம்ஜிஆர் நடத்தியது ராமராஜ்ஜியம். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதுதான் ராமராஜ்யம் அதைத்தான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகம் ஆக மாறிவிட்டது.

விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியம் ஆக மாறும்.எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும், என பேசினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1450

    0

    0