உதயநிதி காலில் விழுந்த மேயர்… இதுதான் திராவிட மாடலின் சுயமரியாதையா..? முன்னாள் அமைச்சர் விளாசல்…!!
Author: Babu Lakshmanan29 June 2022, 5:53 pm
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் காலில் தஞ்சை மேயர் விழுந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் காலில் மேயர் ராமநாதன் விழுந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதுவும், மேயர் அங்கியுடன் சட்டென்று உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது எதிர்கட்சியினரிடையே கடும் விமர்சனத்தையும் உரவாக்கியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது :- திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர் இருக்கும் வரை திமுக கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவை நாட்டில் மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார். எங்களை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதா காலில் விழுவதை திமுக கேலி செய்தும், நையாண்டியும் செய்து பேசினர். ஆனால் இன்றைக்கு திமுகவின் தன்மானம் சுயமரியாதை எங்கே போனது.
தஞ்சையில் உதயநிதியின் காலில், மேயர் அங்கியை அணிந்து கொண்டு மேயர் காலில் விழுந்துள்ளார். அதனை கண்டிக்காமல், உதயநிதி புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
காலில் விழுவதை சுயமரியாதை என்று விமர்சித்த திமுக இதற்கு திமுக என்ன விளக்கம் சொல்லப் போகிறது? மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? மூத்தோர் காலில் இளையோர் விழுவது தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம். ஆனால் இன்றைக்கு வயது இளையோரிடம் முதியோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம் தான் திராவிடத்தின் மாடலா ? இதுதான் திராவிட மாடலில் சுயமரியாதை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா..? இதனை மக்கள் கேட்டாயம்கேட்பார்கள், எனக் கூறினார்.