அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி மைத்ரேயன் நீக்கம் : ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ் அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 3:40 pm

அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார்.

தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது டுவிட்டரில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட ஓபிஎஸ்ஸுடனே பயணித்தார் மைத்ரேயன். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார்.

பின்னர் 108 நாட்கள் கழித்து நேற்றைய தினம் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு தாவினார் மைத்ரேயன். நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் மைத்ரேயனும் இணைந்தார்.

அப்போது அவர் கூறுகையில் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ஓபிஎஸ் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாட்களில் நான் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார்.

இந்த நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…