இலவச பஸ் பயணம் நீர்த்துப் போகிறதா…? தன்மானத்தை கையில் எடுத்த பெண்கள்.. கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு..!

Author: Babu Lakshmanan
3 October 2022, 9:45 pm

ஓசி பஸ்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, கூட்டத்தில் இருந்த பெண்களை பார்த்து, “உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு முதலமைச்சர் 4,000 ரூபாய் கொடுத்தாருல. வாங்குனீங்களா இல்லையா… வாய திறங்க; இப்போ டவுன் பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் ‘ஓசி’லதான போறீங்க?’ என்று அவர்களை ஏளனம் செய்வதுபோல பேசிய வீடியோ காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Ponmudi - Updatenews360

குறிப்பாக வயதான பெண்களின் தன்மானத்தை அது சீண்டிப் பார்ப்பது போலவும் இருந்தது.

பெண்கள் கொந்தளிப்பு

அதுமட்டுமல்லாமல் கோவையில் மூதாட்டி ஒருவர் அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் செய்ய விரும்பாமல், இந்த தமிழ்நாடே ஓசில போனாலும் நான் டிக்கெட் எடுத்துதான் போவேன் என்று கண்டக்டரிடம் பிடிவாதமாக டிக்கெட் வாங்கி பயணம் செய்து அதிரடியும் காட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://www.youtube.com/watch?v=9sBHB9weHXg

மறுநாளே இது ஈரோட்டிலும் எதிரொலித்தது. அங்கு அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உட்பட, அவருடன் அந்த பஸ்சில் பயணித்த சில பெண்களும் நாங்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துதான் வருவோம். இல்லைன்னா எங்களுக்கு டிக்கெட்டே வேண்டாம் என்று வாதாடியதுடன் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் வரி எல்லாத்தையும் கூட்டியாச்சு! பொருட்களோட விலையும் அதிகமாகிப் போச்சு! அதனால டவுன் பஸ் கட்டணத்தை எங்களால தாங்கிக்க முடியாதா?…என்று ஒரு சேர கண்டக்டரிடம் சுளீர் கேள்வி எழுப்பியதையும் கேட்க முடிந்தது. இந்த காட்சிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பிரச்னை பெரிதாகி கொண்டே போவதை உணர்ந்த அமைச்சர் பொன்முடி வேறுவழியின்றி நான் விளையாட்டுத் தனமாகத்தான் சொன்னேன். அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று விளக்கமளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை.

கிராமசபைக் கூட்டம்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் நடந்த கிராமசபை கூட்டம் ஒன்றிலும் இப்பிரச்னை எதிரொலித்ததை காண முடிந்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சியில் உள்ள செட்டிபாளையம் என்ற கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பஸ்ஸில் பெண்கள் இலவசமாக பயணிப்பது தொடர்பாக எழும் பிரச்னைகள் பெரும் விவாதப் பொருளாகவும் மாறிப்போனது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி எம்எல்ஏவான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தமிழரசி என்ற பெண்மணி பேசியபோது, இலவச டவுன் பஸ் பயணம் பெண்களுக்கு எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதை மன குமுறலுடன் வெளிப்படுத்தினார்.

“இலவச பஸ்களில் கண்டக்டர், டிரைவர்கள் பெண்களை மதிப்பதே கிடையாது.
ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல எங்களை பார்த்தாலே பஸ்சை ஸ்டாப்பில் நிறுத்தாமல் கொஞ்ச தூரம் தள்ளிச் சென்றுதான் நிறுத்துகிறார்கள்.
பஸ்சின் பின்னால் நாங்கள் ஓடிச்சென்று ஏற வேண்டி உள்ளது. அதுவும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ்தான் வருகிறது. அதனால் திட்டமிட்டபடி வெளியூர் போகவும் முடிவதில்லை.

பள்ளிக்குழந்தைகள் பஸ்சின் உள்ளே, முன் பகுதியில் நிற்பது தெரிந்தாலும் டிரைவர்கள் சடன் பிரேக் போடுகிறார்கள். இதனால் அந்த குழந்தைகள் பஸ்சுக்குள் விழுவதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் படிக்கட்டு அருகில் நிற்கும்போது இப்படி விழுந்தால் நிலைமை என்னவாகும்?

எங்களுக்கு இலவச டிக்கெட் வேண்டாம். உரிய மரியாதை கொடுத்தால் அதுவே போதும். பெண்களிடம் டிக்கெட்டுக்கு கட்டணம் வாங்கினால் அரசாங்கத்துக்கு லாபமும் கிடைக்கும்” என்று ஆவேசப் பட்டார்.

அதைக்கேட்டு கூட்டத்தில் இருந்த பெரும்பாலான பெண்கள் கைதட்டி தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். அந்தப் பெண்மணி எழுப்பிய கேள்விகளுக்கு தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவரை அமைதிபடுத்தவே முயற்சி செய்தார்.

வாய்க்கொழுப்பு

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இது தொடர்பாக
கூறும்போது “திமுக அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது. அவர்களும் மக்கள் வரிப்பணத்தில்தான் கார், வீடு, ஓசி பணியாட்கள் என அனைத்தையும் ‘ஓசி’யாக அனுபவிக்கின்றனர். பெண்களை பார்த்து ‘ஓசி பயணம்’ என ஒரு அமைச்சர் வாய்க்கொழுப்பாக பேசுகிறார். இதை தவிர்க்கவே இலவசம் என கூறாமல் ‘விலையில்லா’ என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்” என்று பொன்முடியை கேலியாக சாடினார்.

Sellur Raju - Updatenews360

மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு அமைச்சர் பெண்கள் ஓசியில் பயணிக்கிறார்கள் என்று அவமதிப்பதுபோல் பேசுகிறார். மற்றொரு அமைச்சர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு இப்போதுதான் சில்லரை மாற்றுகிறோம் என்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு. வெற்றிக்குப்பின் ஒரு நிலைப்பாடு என்று திமுக செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான இலவச பஸ் பயணம் குறித்த அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். கோவை, ஈரோடு பகுதிகளில் ஒருசில பெண்கள் இலவசப் பயணம் வேண்டாம் என்று புறக்கணித்ததைப் போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் இலவசப் பயணத்தை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்” என்று ஒரு போடு போட்டார்.

நீர்த்துப் போகும் திட்டம்..?

சமூக நல ஆர்வலர்களோ, இலவச பஸ் பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் திமுக அரசின் இத் திட்டம் நாளடைவில் பெண்களிடம் வெறுப்பைத்தான் சம்பாதிக்கும்” என்கின்றனர்.

“அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது ஏற்படும் கசப்பான அனுபவங்கள் குறித்து பெண்களும், மகளிர் அமைப்பினரும் கடந்தாண்டு ஜூன் மாதமே ஊடகங்களில் மனம் குமுறினர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை நடத்துனர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் சில எச்சரிக்கைகளை விடுத்தது.

அதில், நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை எனப் பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ளக் கூடாது. வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவேண்டும். 

பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களைப் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தைப் பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துநரின் சமிக்ஞை கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

முதலில் இந்த எச்சரிக்கையை மதித்து நடந்துகொண்ட நடத்துநர்களும், ஓட்டுனர்களும் காலப்போக்கில் அதை அடியோடு மறந்து விட்டனர் என்பதையே கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட பெண்களின் சமீபத்திய அரசு டவுன் பஸ் பயண அனுபவங்களும் அவர்களது முழக்கங்களும் உணர்த்துகின்றன.

ஏனென்றால் நாட்டில் ஆணும், பெண்ணும் சமம் என்கிறபோது பொது இடத்தில் பலர் முன்பாக, தான் அவமதிக்கப்படுவதையும் ஏளனமாக பார்க்கபடுவதையும் எந்த ஒரு பெண்ணுமே விரும்பமாட்டார். நாம் இலவச பயணம் செய்வதால்தானே இந்த பிரச்சினை வருகிறது. கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விட்டால்
நமது தன்மானத்துக்கு எந்த இழுக்கும் ஏற்படாதே? நம்மை யாரும் கேள்வி கேட்கவும் முடியாதே? என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். அவர் ஏழைப் பெண்ணாகவே இருந்தாலும்கூட இந்த மனநிலைதான் அவருக்கு முதலில் ஏற்படும்.

இன்னும் பலர் நமது வரிப்பணத்தில்தான் அரசாங்கம் இந்த சலுகையை தருகிறது. அப்படி இருக்கும் நம்மை அமைச்சர்கள் கிண்டல் செய்வது சரியா? என்றும் நினைப்பார்கள்.

அதனால் அமைச்சர்கள் ஓசி என்று பேசும்போது, அதை அதிகார ஆணவத்தில்தான் சொல்கிறார்கள் என்றே அவர்களுக்கு தோன்றும். திமுக அரசில் இப்படி நக்கலாக பேசும் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் பொது இடங்களில் இனி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற நாகரீகத்தை கோவை, ஈரோடு, நாமக்கல் பெண்கள் மூலம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். இல்லையென்றால் பெண்களுக்கான இலவச டவுன் பஸ் பயணத் திட்டம் என்பது நீர்த்துப்போய் அது ஸ்டாலின் அரசுக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 769

    0

    0