கமலாலயத்தில் கேம் ஸ்டார்ட்… தேர்தல் குறித்து அமித்ஷா போட்ட அடித்தளம் : பாஜக ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2022, 6:02 pm
வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணியில் இதர கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் விவரம் குறித்தும் அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கூட்டத்தில் கலந்தாலோசித்தார்.
சுமார் 1.30 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் நீடிக்கும் பாஜக, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் கேட்கலாம் என்ற முடிவும், தேர்தலுக்கான வியூகமும் அமித்ஷா கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி என கூறினார்.
மேலும் அண்ணாமலை கூறியதாவது;- பிரதமரை நேற்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அப்போது தமிழ்நாடு மக்களை குறித்தும், தமிழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்; பிரதமர் தமிழ்நாடு மக்களிடம் அளவுக்கதிகமாக பாசம் கொண்டவர். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் பிரதமரை காண வந்தது நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம். அமித்ஷாவை பொறுத்தவரை நமது தாய்மொழியை தான் பிரதானமாக வைக்க வேண்டும் என்கிறார்.
பொறியியல் படிப்பை தமிழ்வழியில் கொண்டு வர வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க.வை எதிரியாக பார்க்கிறார்கள், எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம் என்று கூறினார்.