திமுக-விடம் சீட்டு கூட வாங்க முடியல.. அப்பறம் எப்படி காங்கிரசை வளர்க்க முடியும் : காங்., கூட்டத்தில் தள்ளு முள்ளு…!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 4:38 pm

தூத்துக்குடி : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாய் தகராறால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ பி சி வி. சண்முகம் பேசுகையில், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது, கட்சியை நாம் பலப்படுத்தவேண்டும் என்று பேசினார்.

அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா இருக்கையில் இருந்து எழுந்து, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்..?, ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது, காங்கிரசும் போட்டியிட்டது. இதை ஏன் நீங்கள் பேசி முடிக்கவில்லை? இப்படி இருந்தால் கட்சி எப்படி பலப்படும்? என்று தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.

அப்போது, மாநகராட்சி 34வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ் குறுக்கிட்டு பேச முயன்றார். இதையடுத்து, கூட்ட அரங்கில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர், அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டது. தொடர்ந்து, முத்துவிஜயா கூட்டஅரங்கில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ