தனியாக செல்லும் பெண்களே உஷார்…பைக்கில் பறந்து வந்து செயின் பறிக்கும் கும்பல்: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Rajesh
29 March 2022, 9:55 am

கோவை: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவையில் கடந்த 10 மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள், வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வதற்கும், நகைகள் அணிந்து வெளியே செல்லவும் முடியாமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சவரன் எடைகொண்ட இரண்டு தங்க சங்கிலியையும், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலணி பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்பவர் கடந்த 15ம் தேதி இருகூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் முன்னால் சென்றுகொண்டு இருந்த ராஜாத்தியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் வேகத்தில் சென்றனர்.

இதுகுறித்து ராஜாத்தி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தை தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் போஸ் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இருவர் சங்கிலி பறித்து செல்வது பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இன்று குற்றதடுப்பு நடவடிக்கையாக மசக்காளி பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கோவை பி.என் புதூரை சேர்ந்த தமிழ்செல்வன், மற்றும் திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ராஜாத்தியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடமும் தங்க சங்கிலி பறித்து சென்றது விசாரனையில் உறுதியானது.

https://vimeo.com/693382835

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்12 சவரன் தங்க சங்கிலிகளையும், செயின் பறிப்பிற்கு பயன்படுத்தி வந்த யமஹா இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் வழிப்பறி சம்பவங்களையும், கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?