நடிகை காயத்ரி ரகுராம் தனிக்கட்சி தொடங்க முடிவு…? சசிகலாவுடன் கை கோர்க்கிறாரா….?
Author: Babu Lakshmanan16 January 2023, 8:02 pm
தமிழக அரசியல் களம் அவ்வப்போது விறுவிறுப்பாக நகர்வதை காண முடிகிறது.
கட்சிகள் ஒன்றோடு ஒன்று அனல் பறக்க மோதிக் கொள்வது சில நேரங்களில் வேடிக்கையாக அமைந்து விடுவதும் உண்டு. அதுவும் கட்சிக்குள் பூசல் நடந்து யாராவது ஒருவர் வெளியேற்றப் பட்டால் அதைப் பற்றி சொல்லவே வேண்டியதே இல்லை. பல நேரங்களில் அது வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கவும் செய்துவிடும்.
அதுபோல ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான் ஆவேசம் கொண்ட பெண் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் நடந்து வருகிறதோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வந்த நடிகை காயத்ரி ரகுராம், தொடர்ந்து கட்சி மேலிடத்துடன் மோதல் போக்கை கடை பிடித்ததால் 6 மாதத்திற்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பிறகு இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென்று பாஜகவில் இருந்து விலகிக் கொள்வதாக கட்சி தலைமைக்கு அவர் கடிதமும் அனுப்பினார்.
இந்நிலையில்தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைக்காத குற்றச்சாட்டே இல்லை என்று கூறும் அளவுக்கு, தினம் தினம் டிசைன் டிசைனாக புகார்களை அடுக்கி வருகிறார். அள்ளி விடுகிறார். அவருக்கு சவால் விடுக்கவும் செய்கிறார்.
அவருடைய இந்த திடீர் விஸ்வரூபம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஓரளவு ஏற்க கூடியதுதான்.
கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து காயத்ரி ரகுராம் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கோபம் கொப்பளிக்க கூறியதன் சுருக்கம் இதுதான்.
“என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.
ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பாஜகவில் பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். என் தர்மத்தை நான் நிலை நாட்டுவேன்.
பெண்களை பாஜக அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் வரும் 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்வேன்.
இதில் யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்.
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?…
நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதலமைச்சராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா? அல்லது தமிழ்நாடா? என்று பார்ப்போம்”…
இப்படி அவர் பாஜக தலைமை மீதும், அண்ணாமலை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே போகிறார்.
“காயத்ரி ரகுராம் இப்படி அலறுவதன் மூலம், அவரை திரை மறைவில் இருந்து யாரோ இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம் அவருடைய நிலையும்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி என்ற அடையாளத்துடன் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் சசிகலாவின் நிலையும் ஒரே மாதிரி இருப்பதுதான்.
ஏனென்றால், காயத்ரி ரகுராம் கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமியை சசிகலா வசைப்பாடுவது போலத்தான் உள்ளது என்பது தெரியும்.
தனது நடை பயணத்தில் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று காயத்ரி ரகுராம் கூறுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
அதனால் இதில் சசிகலாவின் ஆலோசனையை அவர் பெற்றிருக்கலாம் என்று ஒரு பேச்சும் தமிழக அரசியல் வட்டாரத்தில் உள்ளது. அதிமுகவில் இல்லாததால் தொண்டர்களை ஒருங்கிணைத்து மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவேன் என்று அடிக்கடி கூறிவரும் சசிகலாவின் அதே வார்த்தைகளைதான் தமிழக பாஜக தலைமை மீது நடிகை காயத்ரி ரகுராமும் வைத்து வருகிறார்.
ஏனென்றால் கட்சித் தலைமையால் பாதிக்கப்பட்டதாக தாங்கள் இருவருமே கருதுகின்றனர். அதனால் சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சி ஒன்றை தொடங்கி தமிழக அரசியலை அவர் ஒரு கலக்கு கலக்குவார் என்று நம்பலாம்.
எனவேதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் விரைவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்து காயத்ரி ரகுராம் அப்படி பேசி இருக்கலாம் என கருத தோன்றுகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பெயரை குறிப்பிட விரும்பாத தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளில் சிலர், காயத்ரி ரகுராமின் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் தகவல்கள் வேறு மாதிரியாக உள்ளன. அவை அதிர்ச்சியும் தருகின்றன.
“ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், இன்னொரு மாநில கட்சிக்கும் நல்ல பிள்ளை போல நடந்து கொள்ள முயற்சி செய்ததுதான் காயத்ரி ரகுராம் செய்த மிகப்பெரிய தவறு. அதுவும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்பு, அவர் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் தானும் ஒருவர் என்ற பந்தாவுடன் துபாய்க்கு சென்ற காயத்ரி ரகுராம், தனக்கு நெருக்கமானவர்கள் இருவரை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்திருக்கிறார்.
அவர்கள் இருவரும் அந்த நட்சத்திர ஓட்டலில் 25 லட்ச ரூபாய்க்கு செலவு செய்துள்ளனர். அந்தப் பணத்தை துபாயில் பாஜக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவரை கட்ட வேண்டும் என்று காயத்ரி ரகுராம், நெருக்கடி கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சி அமைப்பாளரோ அந்த பணத்தை கட்ட மறுத்து இருக்கிறார். இதனால் கடுப்படைந்த காயத்ரி ரகுராம், தமிழகத்தின் இன்னொரு அரசியல் கட்சி தலைவரின் மருமகன் மூலம் அந்தப் பணத்தை செலுத்த ஏற்பாடு செய்து இருக்கிறார். அப்போதுதான் அவர்கள் பாஜகவில் இருந்தவாறே நீங்கள் தொடர்ந்து மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவருடைய பெயர் அரசியல் வட்டாரத்தில் முழுமையாக டேமேஜ் ஆன பின்பு உங்களுக்கு 20 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறி, அதற்கு முன் பணமாக 5 கோடி ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. திரை மறைவில் நடந்த இந்த தகவல்கள் எல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் காயத்ரி ரகுராம் இப்படி தினம் தினம் கொந்தளிக்கிறார்.
கட்சிக்காக 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன் என்று அவர் சொல்கிறார். ஆனால் தொடர்ந்து ட்விட்டரில் பதிவுகள் போட்டாரே தவிர, அவர் களத்தில் இறங்கி உருப்படியாக எந்தவொரு வேலையும் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதேநேரம் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயாரா?…
என்று சவாலும் விடுகிறார். எதன் அடிப்படையில், யாருடைய தூண்டுதலின் பேரில் அவர் இப்படி பேசுகிறார் என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் காயத்ரி ரகுராமின் சவாலை அண்ணாமலை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்.
அதை கண்டு கொள்ளவே மாட்டார்.
அண்ணாமலை மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு அவருடைய அதிரடி பேச்சு, செயல்பாடுகள் மூலம் தமிழக இளைய தலைமுறையினர்
பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
எட்டு ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் காயத்ரி ரகுராமால் ஒரு சிறு துரும்பு அளவிற்கு கூட கட்சியை வளர்க்க முடியவில்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாக, அரசியலில் கோலோச்சி வரும் ஒரு மாநிலக் கட்சியை அண்ணாமலை இன்று ஆட்டம் காண வைத்திருக்கிறார். அதனால்தான் அவர் மீது காயத்ரி ரகுராம் இப்போது அவதூறு கூறுகிறார்” என்று அந்த பாஜக நிர்வாகிகள் எதார்த்த நிலையை உடைக்கின்றனர்.