‘ஐயோ, அம்மா என்று நீங்க கதறுவீங்க.. அண்ணாமலைக்கு சம்மதமா..?’ மீண்டும் சீண்டும் காயத்ரி ரகுராம்.!!
Author: Babu Lakshmanan13 April 2023, 4:24 pm
முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரபல நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் மற்றும் தமிழக மின்வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதில் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் துறைக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநர் ஆர்என் ரவியிடம் கொடுத்தார்.
அதன்பின்னரும், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் சுமத்தி வருகின்றனர். இதனிடையே, அண்ணாமலையின் ரபேல் வாட்ச்சுக்கான பில்லை கேட்டு திமுகவினரும் பதில் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதற்கு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஏப்., 14ம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாகவும், அதோடு சேர்த்து வாட்ச்க்கான பில்லை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மட்டுமில்லாமல் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
இதையடுத்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஏப்.,14ம் தேதி ஊழல் திருவிழா இருப்பதாகவும், அதன்பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும் எனவும் அண்ணாமலை கூறி வந்தார். திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிடுவதற்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி உள்ளிட்டவர்களின் படங்களை பதிவிட்டு நாளை காலை 10.15 மணிக்கு திமுக ஃபைல்ஸ் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனை பாஜகவினர் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த பதிவுக்கு முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பதில் அளித்து டுவிட் போட்டுள்ளார். அதாவது, “திமுக அமைச்சர்களின் சொத்து ஊழல் பட்டியல் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் தற்போது திமுக பதவியோ, எம்எல்ஏயோ, அமைச்சரோ கூட இல்லாத குடும்பத்தை குறிவைத்து திமுக கோப்புகளாக (DMK Files) மாறியுள்ளது. இது ரொம்ப பழைய கோப்புகளா? அரசியலில் இல்லாத அண்ணாமலையின் குடும்ப உறவினரை திமுக குறிவைத்தால் அண்ணாமலை சம்மதிப்பாரா? அவர்கள் அதை அச்சுறுத்தல் என்று அழைப்பார்கள். ஐயோ அம்மா என்று நீ கதருவிங்க. வாக்குறுதி அளித்தபடி வாட்ச் பில் உடன் திமுக அமைச்சரின் சொத்து ஊழல்களை மட்டும் கொடுங்கள்.
அது திருட்டு என்று அழைக்கப்படுகிறது (plagiarism). மாரிதாஸ் 2022 ஜூன் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டார். இப்போ அதே விஷயம் முன்னும் பின்னும் கிராபிக்ஸ் மாற்றுவதன் மூலம் வார்ரூம் OB அடிக்கிறது. குறைந்தபட்சம் திமுக கோப்புகளை பெற அல்லது உருவாக்க கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும், அண்ணாமலை. இதுவும் மற்றவர்களின் கடின உழைப்பைச் சார்ந்தது மற்றும் பிறர் மீது இலவச சவாரி செய்ய வேண்டாம். ,” எனக் கூறியுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்தப் பதிவுக்கு அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.