இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த திமுக நிர்வாகிகள்… காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுவாரா ஸ்டாலின்..? அண்ணாமலை கேள்வி..!!
Author: Babu Lakshmanan22 March 2022, 1:07 pm
சென்னை : இளம்பெண்ணை வீடியோ காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த திமுக நிர்வாகிகளின் செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை, திமுக இளைஞரணி நிர்வாகியான ஹரிஹரன் (27) என்பவர் காதலித்து வந்தார். இவருக்கு சொந்தமான பெத்தனாட்சி நகரில் இருக்கும் மருந்து குடோனில் அந்தப் பெண்ணுடம் ஹரிஹரன் உல்லாசத்தை அனுபவித்துள்ளார். இதனை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி அடிக்கடி மிரட்டி, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோவை தனது நண்பர்களான திமுக இளைஞரணி அமைப்பாளரான ஜுனைத் அகமது (27), மாடசாமி (37), பிரவீன் (22) மற்றும் 4 மைனர் பசங்களுக்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை வைத்து இவர்களும் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். பின்னர், இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில், திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சிய இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இளம்பெண்ணை வீடியோ காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த திமுக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரை சுதந்திரமாக செயல்பட முதலமைச்சர் ஸ்டாலின் விட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- விருதுநகரில் ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம். இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்.
இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே. ஆனால், தற்போது திமுக அரசில் ஒட்டுமொத்த காவல்துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.