மாணவிகளுக்கு மட்டும் ரூ.1000 கொடுப்பீங்க : எங்களுக்கு கிடையாதா?…கொதிக்கும் குடும்பத்தலைவிகள்!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 8:17 pm
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பின்பு இடைக்கால பட்ஜெட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசு தாக்கல் செய்த முழுமையான பட்ஜெட்!!
இந்த நிலையில் இரண்டாவது முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு தாக்கல் செய்த முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.
இதற்கிடையேதான் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சமூக வலைத்தளங்களில் “கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு தாக்கல் செய்யப்பட இருக்கும் நிதி நிலை அறிக்கையில் தெரியவரும்” என்று புதிர் போட்டிருந்தார். இதனால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரையும் ஏகத்துக்கும் எகிற வைத்தது.
குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், மாதாந்திர முறையில் மின் கணக்கெடுப்பு, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு போன்றவை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் அவர்களிடம் ஏற்பட்டது.
இருசக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை, பெட்ரோல் விலை மேலும் 2 ரூபாய் குறைக்கப்பட்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு என்கிற நிலை ஏற்படுத்தப்படும் என்று நம்பினார்கள்.
வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக
அதிலும் குறிப்பாக திமுக அளித்த முக்கிய வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மிகுந்த ஆவலுடன் பெண்கள் காத்திருந்தனர். ஏனென்றால் இவை எல்லாமே உடனடியாக பணப் பயன் தரும் திட்டங்களாகும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போதும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் ஆயிரம் ரூபாய் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டும் ஓட்டு சேகரித்தனர்.
ஏமாற்றம் தந்த பட்ஜெட்
ஆனால் தமிழக மக்களை ஏமாற்றம் அடையச் செய்யும் விதமாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்திருந்தது.
அவருடைய பட்ஜெட் உரையில் முக்கிய அம்சங்கள்.
- இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி பற்றாக்குறை குறைந்துள்ளது.
சவாலான இந்த ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. - சென்னை வெள்ளத்தை தடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டு,வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பள்ளிக்கல்விக்கு 36,895 கோடி ரூபாயும், மருத்துவத்துறைக்கு 17,901 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.
- பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.
- மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு 1,520 கோடி ரூபாய் நிதி.
- கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு.
*அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி என உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 608 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையால் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.
- உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும்.
*1000 ரூபாய் மகளிர்க்கான உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த பயனாளிகளை கண்டறிந்து செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிதி நிலைமையை சரி செய்த பின் நிச்சயம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மீண்டும் இல்லத்தரசிகளை ஏமாற்றிய திமுக
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்தாண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்டு உறுதிப் படுத்துவார்கள் என்று குடும்பத் தலைவிகள் மலைபோல் நம்பி இருந்தனர். ஆனால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ நிதிநிலை சீரான பின்பு தகுந்த பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்கிறார்.
ஏற்கனவே வங்கிகளில் வைத்த 5 பவுனுக்கு மிகாத நகைக் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதைக்கேட்டு உற்சாகம் அடைந்து சுமார் 48 லட்சம் பேர் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றனர்.
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாகுமா?
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று கடும் நிபந்தனை விதித்து அதில் 35 லட்சம் பேரை கழித்து கட்டிவிட்டனர். அதுபோல குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் ஆகிவிடக்கூடாது.
அரிசி கார்டு வைத்திருக்கும் 2 கோடியே 15 லட்சம் பேரில் எப்படியும் ஒரு கோடி குடும்பத் தலைவிகள் வறுமைக்கோட்டுக்கு கீழே தான் இருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றுதான்.
அரசின் சாதாரண டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்ய ஏழை, பணக்காரர், நடுத்தர வர்க்கத்தினர் என்ற பாகுபாடின்றி அத்தனை பெண்களையும் தமிழக அரசு அனுமதிக்கும்போது, நகைக்கடன் தள்ளுபடி, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்ற விஷயங்களில் தகுதியானவர்களுக்கு மட்டும் என்கிற நிபந்தனை ஏன் வைக்கப்படுகிறது என்பதும் தெரியவில்லை.
மாணவிகளுக்கு ரூ.1000 : நிபந்தனைகள் உண்டா?
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க இருப்பதாக கூறப்படும் அறிவிப்பு வரவேற்கக் கூடியதுதான். என்றபோதிலும் அதற்கும் என்னென்ன நிபந்தனைகளை விதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
குடும்பத்தலைவிகளுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க திமுக அரசு மிகுந்த தயக்கம் காட்டி வருகிறது. அதேநேரம் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மட்டும் மாதம்தோறும் 1000 ரூபாய் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதற்கு சமம்.
கடன் சுமையில் தமிழக அரசு
மேலும் திமுக அரசு கடந்த 10 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது என்கிறார்கள். இது வரும் நிதியாண்டில் ஒரு லட்சத்து
20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இப்படி ஆண்டுக்கு ஆண்டு கடன் வாங்குவது அதிகரித்துக்கொண்டே போனால் மாநிலத்தின் நிதி நிலைமை எப்போது சீராகும்?… ஏழைப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பது எப்போது? என்கிற கேள்விகளும் எழுகின்றன. இதனால் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், மாதாந்திர முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை மேலும் 2 ரூபாய் குறைப்பு, பொங்கலுக்கு பரிசு பணம் என்பதையெல்லாம் இனி எதிர்பார்க்கக்கூடாது என்ற எண்ணமும் மக்களுக்கு ஏற்படும்.
இதனால் தேர்தலின்போது தான் அளித்த முக்கிய வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுமா? என்ற சந்தேகதான் வருகிறது” என்று அந்த சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.