தேர்வு செய்யப்பட்ட கேங்மேன்களுக்கு பணிகளை வழங்குக.. வழக்கை வாபஸ் வாங்குங்க : திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2023, 4:01 pm
தேர்வு செய்யப்பட்ட கேங்மேன்களுக்கு பணிகளை வழங்குக.. வழக்கை வாபஸ் வாங்குங்க : திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, அம்மாவின் அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது. இதைத்தொடர்ந்து 5,237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கான விதிகள் அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், அம்மா அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தி தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர். இன்றுவரை தங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால், தங்களது கோரிக்கையினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20ந்தேதி கொளத்தூரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
அப்போது காவல்துறை அவர்களைக் கைது செய்தது. மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல்துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும், அரசு வேலை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல் லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் தி.மு.க. அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.