சர்வதேச மகளிர் தினம்…பெண்களை மதித்து கொண்டாடுவோம்: டூடுல் வெளியிட்ட கூகுள்…அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து…!!

Author: Rajesh
8 March 2022, 12:46 pm

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றகர். மேலும், பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில், இந்த உலக மகளிர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறந்த நாளில் நாம் பெண்களின் பெண்மையை மதித்து கொண்டாடுவோம். நம் நாட்டில் ஆன்மிகம் அறிவுசார் சமூக மற்றும் அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும். அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய அனைத்து பெண் தலைவர்களுக்கு தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். இந்த நன்நாளில் நம் பெண்கள் தங்கள் அயராத பங்களிப்பை தொடர வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நடைபோடும் திராவிட மாடல் அரசு, மகளிர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்வு, தொடக்கப் பள்ளிகளில் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு,மகளிர் சுயஉதவிக் குழு, திருமண நிதி உதவி,கல்விக் கட்டணச் சலுகைகள், நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பெண்களின் முன்னேற்றத்துக்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றுச் சிறப்புக்கு உரியனவாகும். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என எம்ஜிஆர், தனி இடஒதுக்கீடு வழங்கினார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், மருந்துகள் எப்படி நம் உடல் நிலையை சீராக்கி நலப்படுத்துகிறதோ, அதுபோல மகளிரும் நம் குடும்பத்தை சீராக்கி நிலை நிறுத்துகிறார்கள். மகளிர் தினத்திலே பெருமைக்குரிய பெண்குலத்தின், அருமைகளை போற்றி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், கடவுளாக்கி
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை

சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்

உன் தியாகத்தை –
திண்மையை –
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்

நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை

எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!

என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். ‘சார்புகளை உடை’ என்ற தலைப்பின் கீழ் மனாசும் அவரது குழுவினரும் சேர்ந்து 15 அடி அகலமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

15 டன் மணலைக் கொண்டு 7 மணி நேரம் வேலை செய்து இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். பெண்கள் குறித்து கூறிய மனாஸ், இந்த தலைமுறையில் பெண்கள் பல்வேறு துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர். எந்த துறையிலும் பெண்கள் பின்தங்கவில்லை என்று கூறினார்.

  • Thalapathy 69 movie update தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
  • Views: - 1318

    0

    0