‘சொன்னா கேட்கவே மாட்டீங்களா…?’ இது மதச்சார்பற்ற நாடு… அமைச்சர் செந்தில் பாலாஜி vs எம்பி செந்தில்குமார் ; திமுகவில் சலசலப்பு!

Author: Babu Lakshmanan
16 December 2022, 2:38 pm
Quick Share

திமுகவில் இருப்பவர்களில் பெரியார் கொள்கைகளை அதிதீவிரமாக கடைபிடிப்பவர்களில் திமுக எம்பி செந்தில்குமாரும் ஒன்று. தனது செயல்பாடுகள் மற்றும் சமூகவலைதளங்களில் போடும் பதிவுகளின் மூலமாக அதனை வெளிப்படுத்தி வருவார். ஒரு கட்டத்தில் இவரது செயல்பாடுகள் திமுகவில் உள்ள கடவுள் நம்பிக்கை கொண்ட சக நிர்வாகிகளாலே ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கும்.

அந்த வகையில், தருமபுரியில் புதிய நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. எம்.பி., செந்தில்குமார், பூஜை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அங்கு பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததாக கூறப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு விழாக்களில் எந்தவொரு மத சடங்குகள் பூஜையையும் செய்யாதீர்கள் என்றும், மீறி செய்தால் அந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திமுகவினரும் அவரை இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அழைத்து அவமானப்பட வேண்டாம் என முடிவு செய்தனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் வார்டு 36ல் உள்ள திருமாநிலையூர் ரவுண்டானாவில், ரூ.13.20 லட்சம் செலவில் செயற்கை நீருற்று மற்றும் RGB LED மின்விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடக்கும் இந்த பூமிபூஜை தொடர்பான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது.

கரூர் மாநகராட்சியில் நடக்கும் பூமி பூஜை விழாவுக்கு தருமபுரி எம்பி செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கரூர் மாநகராட்சி பார்வைக்கு, இந்தியா ஓர் மதச்சார்பற்ற_நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால், கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில், அந்த நிகழ்ச்சிக்கு பெயர் அடிக்கல் நாட்டு விழா அல்லது பணிகள் துவங்கும் விழா எனக் குறிப்பிடுமாறு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து இப்படி பொதுவெளியில் விமர்சனம் செய்வதா..? என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், திமுக எம்பி செந்தில்குமார் தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் திமுகவில் உள்ள கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீனியாரிட்டி அமைச்சர் பட்டியலில் டாப் 10க்கள் இடம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி அலை வீசி வரும் நிலையில், திமுக எம்பியின் இந்த செயல் அமைச்சரின் ஆதரவாளர்களிடையே மேலும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 589

    0

    0