சென்னை ; அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மருத்துவம் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலையளிக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இந்த இரு நிலைகளுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும் வரை அத்தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியது அரசின் கடமை. தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்கள் லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதைக் கருத்தில் கொண்டு தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை; அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.
வழக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நீட் பயிற்சி தொடங்கும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படும். தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஓராண்டு முதல் இரு ஆண்டுகள் வரை வழங்கப்படும் நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போதுமானதல்ல.
ஆகஸ்ட் மாதம் பயிற்சி வகுப்புகளை தொடங்கினாலே அது போதுமானதாக இருக்காது எனும் சூழலில், நவம்பர் மாதம் பிறந்தும் கூட பயிற்சி வகுப்புகளை தொடங்கவில்லை என்றால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு வெற்றி பெற முடியும்?கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் திசம்பர் மாதம் வரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. அதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவர்களில் 5,132 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு எழுதிய 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் இது 24.72 விழுக்காடு மட்டும் தான்.
மார்ச் மாதம் 13-ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதற்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், ஜனவரி மாதத்திற்கு பிறகு மாணவர்களின் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். அதனால், ஏற்கனவே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட, அது போதுமானதாக இருக்காது. பள்ளிகள் திறந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாதது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது; அதனால் அவர்களுக்கு குறைந்தது 500 இடங்கள் கிடைத்து விடும் என்பதாலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது.
7.5% ஒதுக்கீடு தவிர மீதமுள்ள பொதுப்போட்டி பிரிவுக்கான இடங்களையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அதில் தான் பள்ளிக்கல்வித்துறையின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும். அத்துடன் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவு படுத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.