அரசுப் பள்ளிகள் சாபக்கேடு… மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ; கண்ணீர் மல்க பேசிய ஆசிரியை..!!
Author: Babu Lakshmanan3 October 2022, 10:05 pm
கிராமசபைக் கூட்டத்தில், அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே அக்.,2ம் தேதியான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் தங்கள் பள்ளியில் உள்ள மின்சார இணைப்பு பிரச்சனை குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்.
இதுபோன்ற அலட்சியத்தினால் கட்டிடத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது..? யார் பொறுப்பு..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த மின்சார பிரச்சனையை சரிசெய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என்றும், உங்களுக்கு ஏதேனும் வருமானம் வந்தால், அதை வைத்து அதனை சரிசெய்து கொள்ளுமாறு பிடிஓ தெரிவித்ததாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அவர் அரசு பள்ளிகளே சாபக்கேடு என்றும், பேசாமல் வேலையை VRS கொடுத்து சென்று விடலாம் எனக் கூறிய அந்த ஆசிரியை கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.