ஆளுநர் ரவியின் கவலையால் அதிர்ந்து போன திமுக.. CM ஸ்டாலினுடன் அடுத்த பனிப் போர்….? ஈரோடு கிழக்கில் எதிரொலிக்குமா…?

Author: Babu Lakshmanan
22 February 2023, 7:24 pm

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடும் சில கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு.

தமிழ்நாடு

அதுபோல்தான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியதும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதை தவிர்த்துவிட்டு தமிழக ஆளுநர் ரவி என்று குறிப்பிட்டு இருந்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை கொந்தளித்து கண்டனமும் தெரிவித்தன. இப்பிரச்சனை குடியரசுத் தலைவர் வரை கொண்டும் செல்லப்பட்டது.

Governor RN RAvi - Updatenews360

அதன் பிறகு ஆளுநர் ரவி தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மிக அண்மையில் அவர் பதிவிட்ட ஒரு தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. அது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ராணுவ வீரர் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள வேலம்பட்டி கிராமத்தின் எம்ஜிஆர் நகரில் ராணுவ வீரர் பிரபு என்பவர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வுதான், அது.

இத்தனைக்கும் பொது குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த பிரபுவின் சகோதரர் பிரபாகரனுக்கும், சின்னசாமி மற்றும் அவருடைய 3 மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறுதான் முற்றிப்போய், அடி தடி வெட்டு, குத்து என்று விஸ்வரூபம் எடுத்து பிரபுவின் கொலையில் முடிந்துள்ளது. இந்த தாக்குதலின்போது பிரபாகரனும் அவருடைய தந்தை மாதையனும் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. ஏனென்றால் படுகாயம் அடைந்த பிரபாகரனும் ராணுவத்தில் பணியாற்றி வருபவர்தான். தேசிய அளவில் ஆங்கில செய்தி சேனல்கள் இதுகுறித்த செய்தியை விரிவாக வெளியிட்டும், விவாதங்கள் நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சம்பவம் நடந்த தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்களும் டிவி செய்தி சேனல்களும் சிறிய அளவில் கூட இதை செய்தியாக வெளியிடவில்லை.

பாஜக

அதேநேரம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவாகரத்தை கையில் எடுத்ததும் ராணுவ வீரர் கொல்லப்பட்ட நிகழ்வு தற்போது தமிழகத்தில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த 16ம் தேதி மாநில முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”ராணுவ வீரர் பிரபு கொலையை பத்திரிகைகளும், பாஜகவும் கையில் எடுத்த பிறகுதான் கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டார்கள். இந்த மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ராணுவ வீர பிரபுவின் மரணத்தில் போலீஸ் மெத்தனம் காட்டி இருக்கிறது. பிரபுவின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவருடைய இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்போம்” என்று தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்ததும், பாஜகவினர் சுவாமி சிவானந்தா சாலையிலிருந்து போர் வீரர் நினைவுச் சின்னம் வரையில் பேரணியாக மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் பிரபுவின் உருவப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினர்.

ஆளுநருடன் சந்திப்பு

இதையடுத்து முன்னாள் ராணுவ வீரர்கள் சிலருடன் சென்று ஆளுநர் ரவியை அண்ணாமலை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது, ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சரின் பணி நம்பிக்கை அளிக்கும்படி இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேபோல அவருடன் சென்றிருந்த முன்னாள் ராணுவ வீரர்களும் தங்களது மன வேதனையை புகாராக தெரிவித்தனர்.

ஆளுநர் டுவிட்

அவர்கள் அனைவரும் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக ஆளுநர் மாளிகை அதிரடியாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டது. அதில், “ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த பதிவை இந்திய ராணுவம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக டேக் செய்யப்பட்டும் இருந்தது, குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்தே இந்த விவகாரத்தை ஆளுநர் ரவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுவதை புரிந்து கொள்ள முடியும்.

“ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தமிழக ஆளுநர், இது வேதனைக்குரிய விஷயம் என்று கூறியிருப்பதால் இனி இதன் மீது மாநில திமுக அரசு தனி கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“இது திட்டமிட்ட கொலை அல்ல, தற்செயலாக நடந்த ஒன்றுதான். ராணுவ வீரர் பிரபு மீது தாக்குதல் நடத்திய ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்று மாவட்ட காவல்துறை என்னதான் காரணம் கூறினாலும் மாநிலத்தில் தினமும் நடக்கும் ஏதோ ஒரு கொலைச் சம்பவம் போல திமுக அரசு இதையும் கையாளுகிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பதிலளிக்க மறுப்பு

ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலினிடம், ராணுவ வீரர் திமுக நிர்வாகி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது பற்றி பிரபல ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் பெண் நிருபர் ஒருவர் கேள்வி கேட்க அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஸ்டாலின் அப்படியே விறுவிறுவென்று நடந்து அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். அந்தப் பெண் நிருபர் விடாமல் துரத்திச் சென்று கேள்வி கேட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.

CM Stalin - Updatenews360

அதேபோல ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதியிடமும் இதேபோல ஆங்கில செய்தி சேனல் நிருபர் கேள்வி கேட்க அதற்கு அவர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்று பதிலளித்தாரே தவிர கொலையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், உதய நிதியை சுற்றி இருந்த திமுகவினர் அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு உதய நிதியை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்று விட்டதுதான்.

வழக்கமாக குறிப்பிட்ட தமிழ் செய்தி சேனல்களின் நிருபர்கள் கேள்வி கேட்டால் அதற்கு ஆர்வமாக சளைக்காமல் பதில் அளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் ஆங்கில செய்தி சேனல்களின் நிருபர்களை கண்டால் மட்டும் ஏன் நேருக்கு நேர் சந்திக்க தயங்குகிறார்கள்? என்பதுதான் புரியவில்லை. ஒரு கேள்விக்கு பதில் அளித்தால் அதை வைத்து அவர்கள் அடுக்கடுக்காக கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு தங்களை தர்ம சங்கடத்தில் தள்ளி விடுவார்களோ? என்ற அச்சம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

அல்லது இதுகுறித்து விரிவாக பேசப் போய் அது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ? என்று நினைத்தும் கூட ஆங்கில செய்தி சேனல் நிருபர்களுக்கு பதில் அளிக்காமல் இருவரும் விட்டிருக்கலாம்.

இடைத்தேர்தல்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, தன்னை ஒரு தேசிய தலைவராக அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது இந்த ஆங்கில செய்தி சேனல் நிருபர்களின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பார்? அவர்களை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்விகளும் எழுகிறது.

எது எப்படியோ ராணுவ வீரர் பிரபுவின் கொலையை ஆளுநர் ரவி தீவிரமான விஷயமாகவே கருதுவது தெரிகிறது. இது தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது
“ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை. இதற்கு மத்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைமை தேர்தல் ஆணையம் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்தால் அதை தமிழக மக்கள் வரவேற்பார்கள். ஏனென்றால் அங்கே ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருப்பது போல் மக்களை ஓட்டுக்காக அடைத்து வைத்திருக்கிறார்கள் என குற்றம் சாட்டி இருக்கிறார்.

எனவே திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆளுநர் ரவி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் கவலை தெரிவித்து இருப்பது எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0