ஆளுநர் ராஜ்பவனில் இருந்து வெளியே கால் வைக்க முடியாது : கனிமொழி பேச்சுக்கு தமிழக பாஜக கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 April 2023, 7:52 pm
சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ” தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது என்றும், எங்கள் உயிர் என்றால் உங்களுக்கு விலை கொடுத்து வாங்க கூடிய பொருள் என்று நினைத்தால் நாங்கள் எந்த எல்லை வர வேண்டுமானாலும் போவோம், உங்களால் ராஜ்பவனில் இருந்து கூட வெளியே கால் வைக்க முடியாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கனிமொழி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “ஆளுநர் ராஜ்பவனிலிருந்து வெளியே கால் வைக்க முடியாது” – மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திராணியிருந்தால், தெம்பிருந்தால், துணிவிருந்தால் ராஜ்பவனிலிருந்து ஆளுநர் வெளியே வரும் போது தடுத்து நிறுத்தி பாருங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் கடமையை செய்யும் என பதிவிட்டுள்ளார்.