பெட்ரோல் குண்டு கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவா..? திமுகவா…? சம்பந்தப்பட்ட வழக்கறிஞரே சொன்ன தகவல்…!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 10:28 am

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த விவகாரத்தில் திமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரே வாய்திறந்து விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறையில் இருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட X தளப்பதிவில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது,” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ரகுபதியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக பாஜக, கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுக தான் என்று ஆதாரத்தையும் வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும், கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்றும், பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தது.

அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே எடுத்தது பாஜகவா..? திமுகவா…? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “வழக்கறிஞர் என்ற முறையில் பல கட்சியினரை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளேன். அனைத்து கட்சியினரின் வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன்.

தற்போது நான் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. 2023ல் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தோம். எனக்கும், கருக்கா வினோத்திற்கும் நேரடி தொடர்பு கிடையாது, என்று கூறியுள்ளார்.

  • கோலிவுட்டுக்கு டாட்டா..! ஹாலிவுட்டை கலக்க போகும் பிரபல காமெடி நடிகர்…
  • Views: - 324

    0

    0