விஸ்வரூபம் எடுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்…? அதிரடியாக களம் இறங்கிய NIA… திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 7:54 pm

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆதாரங்களுடன் வெளிப்படையாக பேசுவது அவ்வப்போது மாநில அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறிவிடுகிறது.

ஆளுநராக பதவியேற்றது முதலே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அவ்வப்போது இப்படி பேசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அது பெரும்பாலும் மறைமுகமாக ஆளும் திமுக அரசுக்கு அறிவுரை கூறுவது போலவும் திமுகவின் சித்தாந்தங்களுக்கு நேர் எதிராக இருப்பதாலும் பலத்த விமர்சனத்திற்கும் உள்ளாகி விடுகிறது.

திருச்சி நகரில் இரு தினங்களுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கும் விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது, “தமிழகத்தில் ஆரியர், திராவிடர் என ஒன்றும் கிடையாது. திராவிட கொள்கைகள் தொடர்பான ஆய்வுகள் பெரும்பாலும் ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படாமல் வெறும் பிரச்சாரமாகவே உள்ளது. மருது சகோதரர்கள், முத்துராமலிங்க தேவர் போன்றவர்கள் சாதிய தலைவர்களாக சித்தரிக்கப்படுவதை பார்க்கும்போது மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், பகத்சிங் போன்ற சுதந்திர போராட்ட பெரும் தலைவர்கள் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதிய தலைவர்களாகத்தான் மாற்றி இருப்பார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக கண்டனம் தெரிவித்தார். “திடீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றை காந்தியின் இறுதி நாட்கள் சொல்லும்” என்று மறைமுகமாக ஆளுநர் ரவியை தாக்கவும் செய்தார்.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி ஆர் பாலு
இன்னும் ஒரு படி மேலே போய், “ஆளுநர் பதவியில் இருந்து விலகி விட்டு அரசியல் பேசுங்கள், அதுவரை ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை” என்று காட்டமாக
போட்டு தாக்கினார். அதன் பின்பு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு போன்றவர்களும் ஆளுநர் ரவியை கண்டனக் கணைகளால் துளைத்து எடுத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக அக்டோபர் 25ம் தேதி பிற்பகல் 2.45 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷமிட்டவாறே இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை ஆவேசமாக வீசினார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. எந்த நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் முதல் பிரஜை என்று அழைக்கப்படும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண, ஏழை, எளிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்ற கோபமான கேள்விகளும் பொதுவெளியில் எழுந்தன.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை ஆளுநருக்கு எதிராக வீராவேசத்துடன் முழங்கிக் கொண்டிருந்த திமுக தலைவர்களும் கப்சிப் ஆகிவிட்டனர். ஏனென்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது என்பதற்கு உதாரணம்தான் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் என்ற விமர்சனம் எழும் என்பதால் அவர்கள் அனைவருமே சைலன்ட் மோடுக்கு மாறினர்.

இதில் இன்னொரு ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, டி ஆர் பாலு எம்பி போன்றோர் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தது தொடர்பான செய்திகளுக்குத்தான் அன்றைய தினம் முக்கியத்துவம் கொடுத்து, வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தி வெளியான அடுத்த நிமிடமே அதை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டு நைசாக நழுவிக் கொண்டன.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த 36 வயது இளைஞர் வினோத் ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ஒரு பிரபல ரவுடி என்பதும், இரு தினங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்தவர் என்ற பகீர் தகவல்களும் தெரிய வந்தன. வினோத்திடமிருந்து, இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை பெரு நகர சென்னை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தவிர இவர் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவத்தால் அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை, பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றையும் அளித்தது.

அதில், ‘கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தர்மபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் சென்றிருந்தபோது அவருடைய வாகனத்தை நோக்கி தடி மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்யவும் இல்லை. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் ‘ஆளுநரை அச்சுறுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த வெட்ககேடான வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரமாக ஆராய்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 124 ன் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் கீழ் ஆளுநரால் பணியாற்ற முடியாது. எனவே இந்த விவகாரத்தை தீவிரமானதாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணை நடத்தி, தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உள்பட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். மேலும் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்’ என்றும் அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரிய போராட்டத்தில் குதித்து இருக்கும்.
டிவி செய்தி சேனல்களிலும் மணிக்கணக்கில் அனல் பறக்க விவாதங்களும் நடந்திருக்கும். ஆனால் இப்போது திமுக ஆட்சி நடப்பதால் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கோ, டிவி செய்தி சேனல்களுக்கோ இது மிக மிக சாதாரணதொரு செய்தியாக தெரிகிறது, போல. அதனால் இவர்கள் யாருமே சிறு முணுமுணுப்பை கூட வெளிக் காட்டவில்லை.

ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வன்மையாக கண்டித்தார். ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அவர் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையும் விட்டு வைக்கவில்லை.

அவர் விடுத்த அறிக்கையில், “தமிழக ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும், மாண்பையும், அமைதிப் பூங்கா என முன்பு தமிழகத்திற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் தமிழக ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது,
தமிழக உளவுத்துறையும் , காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டு வீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது. இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது. இதுதான் விடியா திராவிட மாடல்!”
என்று கொந்தளித்து இருக்கிறார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர், சில மாதங்களுக்கு முன்பு கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஆவார். தமிழகத்தில் உளவுத்துறை எந்த அளவிற்கு கோட்டை விடுகின்றது என்பதற்கு இது உதாரணம்.

இனிமேல், அரசையும் காவல் துறையும் நம்பி பிரயோஜனம் இல்லை. தமிழக மக்கள் ஆண்டவனைத் தான் வேண்டிக் கொள்ளவேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது காவல்துறைக்கு அதிகாரத்தை கொடுத்து இது போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பாரா?…

உச்சபட்ச அதிகாரம் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பாக இதுபோன்ற சம்பவம் நடைபெறுகிறது என்றால், சாதாரண மக்களுக்கும், பெண்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதுதான் கேள்வி. ஒரு தொடர் குற்றவாளியை உளவுத்துறையால் கண்காணித்து, பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் சிறு நகரங்கள், கிராமங்களில் எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்கள்?” என்ற கிடுக்குப் பிடி கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மனக்குமுறலுடன் தெரிவித்த கருத்துகள் இவை.

“மாநிலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தமிழக போலீசார் அவ்வளவு தீவிரமானதொரு விஷயமாக எடுத்துக் கொள்ளாததால்தான், பலத்த பாதுகாப்பு மிக்க ஆளுநர் மாளிகை முன்பாகவே பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றின் மீது மாநில போலீசார் கடுமையான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஒருவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றால் சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஜாமீனில் எடுப்பவர்கள் யார்?… அவர்களின் பின்னணி என்ன? பெட்ரோல் குண்டு வீசியவர் அரசியல் பின்புலம் கொண்டவரா? என்பதில் போலீஸ் கவனம் செலுத்தினாலே இதுபோன்ற குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.

இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என அத்தனை பேரும் கடும் கண்டனம் தெரிவிப்பதும் இது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் மூத்த எம்பி டி ஆர் பாலு, ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை என்று கடுமையாக தாக்கி இருந்தார். இது மிகவும் அநாகரிகமான வார்த்தைகள் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இது இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே திமுக குறித்து ஒரு தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும். தமிழக ஆளுநர் ரவி, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க முடியாது என்று இரண்டாவது முறையாக மறுத்ததும் கூட ஆளுநர் மீதான திமுகவின் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம்.

இதனால் ஆளும் கட்சியின் மீது தீவிர பற்று கொண்ட அனுதாபிகளுக்கு ஆளுநர் மீது கடுமையான கோபம், வெறுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆகையால் ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் அவருடைய வாயைக் கட்டி போட நினைத்துக் கூட இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.

அதேநேரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகமும் இதை ஒரு சீரியஸ் விவகாரமாக எடுத்துக் கொண்டு இனி திமுக அரசுக்கு பல்வேறு விதங்களில் குடைச்சலை கொடுக்கலாம்.

தற்போது தேசிய புலனாய்வு அமைப்பான NIAவும் இந்த வழக்கை தன் கையில் எடுத்துக்கொண்டு தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது. குறிப்பாக கைதான வினோத், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக யார் யாருடன் எல்லாம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்? இது திட்டமிட்ட சதி வேலையா? என்பது குறித்து அக்கு வேர் ஆணிவேராக NIA விசாரிக்கத் தொடங்கி இருப்பதால் இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோர் அமலாக்கத்துறையிடம் சிக்கி படாத பாடுபட்டு வரும் நிலையில் டி ஆர் பாலு எம்பி, சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு போன்றோரும் வருமான வரித் துறை, அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டுகளில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக தலைவர்கள் ஆளுநர் ரவியை எல்லை மீறி விமர்சித்து வலிய சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்களோ என்றே கருதத் தோன்றுகிறது” என அந்த டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 323

    1

    0