பல்கலை.,மாணவர்களிடையே அரசியல் புகுத்தும் ஆளுநர் : பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 7:54 pm

மரபு முறைகளை பின்பற்றாமல் நடத்த உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழா ஜூலை 13 ம் தேதி நடைபெற உள்ளதாகவும், ஆனால் இணை வேந்தரான தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், உயர்கல்வித்துறை செயலாளரிடமோ ஆலோசனை நடத்துவதில்லை என்றும், பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம் என்றார்.

ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கௌரவ விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஆளுநராக இல்லாமல் பாஜகவிற்கு பிரச்சார செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.

இவ்வாறு, பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தினால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக குறிப்பிட்டார்.

இது போன்ற பிரச்சினைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இன்னும் கையொப்பம் இடவில்லை என்றார். இதே போல ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பொன்முடி கூறினார்.

மேலும் ஆளுநர் திராவிடம் குறித்து பேசும் போது வரலாற்றை தெரிந்த பின்பு பேசவேண்டும் என்றும் எத்தனை இசங்கள் இருந்தாலும் ஹூமனுசமான மனிதாபிமானம் தான் திராவிட மாடல் என்றும் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 640

    0

    0