உதயநிதிக்கு உறுதியானது அமைச்சர் பதவி… டிச.,14ல் பதவியேற்பு விழா ; 400 பேருக்கு அழைப்பு..!!
Author: Babu Lakshmanan12 December 2022, 7:05 pm
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வரும் 14ந் தேதி உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும், தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு என தனி அறை தயாராகி வருவது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி வருகிறது. வரும் 14ம் தேதி காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் இளைஞர் நலன், விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை மூத்த அமைச்சரான கே.என். நேருவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.