அடுத்தடுத்து ஆளுநர் ஆர்.என் ரவி காட்டும் அதிரடி…! பரபரப்பில் தமிழக அரசியல்… அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!
Author: Babu Lakshmanan12 January 2023, 6:26 pm
தமிழக ஆளுநர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது என்பது நாடறிந்த விஷயம்.
கடந்த 9-ம் தேதி இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை அவர் வாசித்தபோது திமுக அரசின் சாதனைகள் சிலவற்றை தவிர்த்து விட்டு படித்ததாகவும் சில இடங்களில் சொந்தமாக தனது கருத்தை அவர் பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில் தமிழக அரசின் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் ஆளுநர் வாசித்த உரையை ஏற்கக்கூடாது என்று குறிப்பிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் ரவி அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இது போன்ற நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை என்பதால் இது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
இதனால் கொந்தளித்த திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் ரவியை உடனடியாக குடியரசு தலைவர் திரும்ப பெறவேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளன.
இது ஒரு புறம் இருக்க, மறுநாளே ஆளுநர் ரவி திமுக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்துவது போல இன்னொரு கருத்தையும் பதிவு செய்தார்.
சென்னையில் எண்ணித்துணிக என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்று இந்திய குடிமைப் பணி நேர்முக தேர்வை எதிர்கொள்பவர்களுடன் கலந்துரையாடியபோது. “உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை அமல்படுத்துவது மட்டும்தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியின் கடமை. இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால்
இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசு மூலம் மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவரிடம் மத்திய அரசும், மாநில அரசும் இரு வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கும்போது யார் பக்கம் நிற்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “இதில் சந்தேகமே வேண்டாம். இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும். எவ்வித மாற்றம் என்றாலும் அதில் பிரச்னை
இருக்கத்தான் செய்யும். ஆம், பணம் இல்லாத பரிமாற்றத்தில் நாம் முழுமை பெறவில்லை. இன்னும் பண பரிவர்த்தனை உள்ளது. ஆனால் தெருவோர கடைகள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சென்று அடைந்துள்ளது”
என்று குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு என்று வரும்போது குடிமைப் பணி அதிகாரிகள் மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருப்பதால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்!
காரணம் தமிழகத்தில் பணியாற்றும் குடிமைப் பணி அதிகாரிகளுக்கும் இது பொருந்தும் என்பது சுட்டிக்காட்டப் பட்டிருப்பதுதான்.
இதேபோல்தான், “மத்திய அரசை சிலர் ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள். இது தவறில்லை. ஆனால் உள் நோக்கத்துடன் அப்படி பேசுவதுதான் தவறு. ஏனென்றால் தமிழகத்தை தாண்டி விட்டால் ஒன்றிய அரசு என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாது” என்று சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ரவி பேசி இருந்தார். இது திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதுவும் மிக அண்மையில், திருவையாறு தியாகராஜர் ஆராதனை நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது,”நமது பாரத நாடு ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தோன்றிய சனாதனம்தான் நாடு முழுவதும் பரவியது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியே நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. பக்தி தான் மிகப் பெரும் சக்திவாய்ந்த ஊடகமாக திகழ்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
“ஆளுநர் ரவி சனாதன தர்மம், திருக்குறள், திராவிடம், தமிழகம் போன்றவை குறித்து விளக்கம் அளித்து பேசுவதை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை கடுமையாக எதிர்த்து வருகின்றன என்பது வெளிப்படை.
ஆனாலும் ஆளுநர் ரவி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“தற்போது சனாதன தர்மம் தமிழகத்திலிருந்துதான் நாடு முழுக்க பரவியது என்று ஆளுநர் பெருமை யோடு கூறியிருக்கிறார். அதில் பக்தி மார்க்கத்தைத்தான் அவர் பெரிதும் பாராட்டுகிறார். எதற்கெடுத்தாலும் சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் அதில் கூறப்பட்டிருக்கும்
பல்லாயிரக் கணக்கான நல்ல விஷயங்களை பற்றி ஒருபோதும் பேசுவதே இல்லை. அதை சுட்டிக் காட்டுவது போலத்தான் ஆளுநர் ரவி இப்படி பேசி இருக்கிறாரோ என்று கருதத் தோன்றுகிறது.
அதேபோல் தான் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதை தவிர்த்துவிட்டு தமிழக ஆளுநர் ரவி என்று அவர் குறிப்பிட்டு இருக்கலாம்.
கடந்த முறை அவர் விடுத்த சித்திரை தமிழ்புத்தாண்டு தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழக அரசின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுர லச்சினை இருந்தது. இந்த முறை அனுப்பிய அழைப்பிதழில் இந்திய அரசின் லச்சினையான சிங்கங்கள் மட்டுமே இருக்கிறது என்று திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கொந்தளிக்கிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கருத்து வேறுபாடு வரும்போது குடிமைப் பணி அதிகாரிகள் மத்திய அரசின் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று ஆளுநர் ரவி வலியுறுத்தி கூறுவதால் இந்திய அரசின் லச்சினையை அவர் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.