மீண்டும் CM ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர்… டக்கென டேப்லெட்டை கையில் எடுத்த சபாநாயகர் ; சட்டப்பேரவையில் நடந்த சம்பவம்..!!
Author: Babu Lakshmanan12 February 2024, 11:04 am
அரசு தயாரித்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி புறக்கணித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு மரபுப்படி காவல்துறை மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டம் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார். மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர், முதல்வர் அவர்களே, என தமிழில் பேசிய தனது உரையை தொடங்கிய அவர், அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.
தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.
அரசு தயாரித்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர் என் ரவி புறக்கணித்த சம்பவம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு உள்பட அங்கிருந்த ஆளும் கட்சியின் உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் படிக்காத பகுதிகளை சபாநாயகர் அப்பாவு படிக்கத் தொடங்கினார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், அரசு தயாரித்த உரையை படிக்க மறுத்த ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில், இந்த ஆண்டும் அரசு தயாரித்த உரையில் உண்மைத் தன்மை இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பது திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, ஆளுநர் படிக்காத உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறைவாக கருதவில்லை என்றும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்துக்களை சொல்ல, இந்த அவை ஏற்ற இடம் அல்ல எனக் கூறினார். பின்னர், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார்.
0
0