ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும்…? இதுதான் ஆளுநரின் சமயோஜித புத்தி ; ஜெயக்குமார் பரபர பேச்சு…!!
Author: Babu Lakshmanan30 June 2023, 1:14 pm
சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சமயோஜித புத்தியோடு ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கூட்டணி கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சிறிது நேரத்தில் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் ஆர்என் ரவி மறு அறிவிப்பை வெளியிட்டார். ஆளுநரின் இந்த செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சமயோஜித புத்தியோடு ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:- செந்தில் பாலாஜியை நீக்கும் விவகாரத்தில் ஆளுநர் சமயோஜித புத்தியோடு செயல்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். அமைச்சராக இருக்கும்போது செந்தில்பாலாஜி விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்.
அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும். பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி?. மாமன்னன் சுத்த ப்ளாப் படம். திமுகவினர் தான் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கிறார்கள், எனக் கூறினார்.